பாரிஸ் ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் - சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்
|ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
பாரீஸ்,
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஈபிள் டவர் உலக சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 1889-ஆம் ஆண்டு ஈபிள் டவர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. உலகில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஈபிள் டவர் உள்ளது.
இந்த நிலையில் ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக இன்று மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ஈபிள் டவர் மூடப்பட்டது. பின்னர் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்ட பிறகு அந்த மிரட்டல் போலியானது என்று தெரிய வந்தது.
இதையடுத்து இரண்டு மணிநேரம் கழித்து எச்சரிக்கை நீக்கப்பட்டு மீண்டும் ஈபிள் டவர் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது. முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே போல் ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.