பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கும் நிபுணத்துவ முறைகளை பகிர்ந்து கொள்ள இந்தியாவிடம் வலியுறுத்திய எகிப்து அதிபர்
|பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கும் நிபுணத்துவம், சிறந்த பயிற்சி முறைகளை இரு நாடுகளும் பரிமாறி கொள்ள வேண்டுமென ராஜ்நாத் சிங்கிடம் எகிப்து அதிபர் சிசி வலியுறுத்தி உள்ளார்.
கெய்ரோ,
எகிப்து நாட்டுக்கு, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இந்தியாவில் இருந்து புறப்பட்டு நேற்று கெய்ரோ நகரை சென்றடைந்து உள்ளார்.
இந்த பயணத்தில் ராஜ்நாத் சிங், எகிப்து பாதுகாப்பு மந்திரி ஜெனரல் முகமது அகமது ஜகியை சந்தித்து பேசுகிறார். இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவாக்கம் மற்றும் அதனை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இந்நிலையில், எகிப்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், அந்நாட்டு அதிபர் அப்துல் பத்தா அல்-சிசியை கெய்ரோ நகரில் இன்று நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில், ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் கூட்டு பயிற்சியில் கவனம் செலுத்துவது, பாதுகாப்பு துறையில் இணைந்து பொருட்களை உற்பத்தி செய்வது மற்றும் உபகரணங்களை பராமரிப்பது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த இரு நாட்டு தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர்.
எகிப்து நாடு, பயங்கரவாதத்திற்கு எதிராக எடுத்த உறுதியான நிலைப்பாட்டை ராஜ்நாத் சிங் வெகுவாக பாராட்டினார். பயங்கரவாத அச்சுறுத்தலை தடுப்பதற்கான நிபுணத்துவம் மற்றும் சிறந்த பயிற்சி முறைகளை இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளும் பரிமாறி கொள்ள வேண்டும் என்று இந்த சந்திப்பின்போது, சிசி வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவின் மிக பெரிய முதலீட்டு தளங்களில் ஒன்றாக எகிப்து நாடு உள்ளது. இதுவரை ரூ.25 ஆயிரத்து 90 கோடி மதிப்பீட்டளவில் எகிப்தில், இந்திய முதலீடு செய்யப்பட்டு உள்ளது. எகிப்தில் பல்வேறு திட்ட பணிகளில் இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.