< Back
உலக செய்திகள்
ஸ்காட்லாந்தில் இருந்து லண்டனுக்கு பயணம்  வழியெங்கும் ராணி எலிசபெத் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி
உலக செய்திகள்

ஸ்காட்லாந்தில் இருந்து லண்டனுக்கு பயணம் வழியெங்கும் ராணி எலிசபெத் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி

தினத்தந்தி
|
12 Sept 2022 12:55 AM IST

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டது. வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

லண்டன்,

இங்கிலாந்து மக்களால் மட்டுமின்றி உலக மக்களாலும் நேசிக்கப்பட்ட ராணி எலிசபெத் (வயது 96) கடந்த 8-ந் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார்.

அவரது உடலுக்கு லண்டனில் இறுதிச்சடங்கு 19-ந் தேதி நடக்கிறது. அன்று வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று முன்தினம் மன்னராக சார்லஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். அப்போது அங்கு எக்காளம் ஊதப்பட்டது. குண்டுகள் முழங்கின. இந்த நிகழ்ச்சியில் ராணி கமிலா, இளவரசர் வில்லியம் கலந்து கொண்டனர்.

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரசும், முன்னாள் பிரதமர்கள் 6 பேரும் பங்கேற்றனர்.

அன்றைய தினத்தில் அரச குடும்பத்தினர் விண்ட்சார், பால்மோரல் மற்றும் லண்டனில் ராணியின் இல்லங்களில் வைக்கப்பட்ட மலர் அஞ்சலி மற்றும் இரங்கல் செய்திகளைப் பார்வையிட்டனர். மேலும் அரச குடும்பத்தின் ஒற்றுமையைக் காட்டும் வகையில் இளவரசர் வில்லியம், இளவரசி கேதரின் மற்றும் இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் ஆகியோர் விண்ட்சார் கோட்டையின் வாயிலில் கூடி மலரஞ்சலி செலுத்திய பொதுமக்களிடம் பேசினர்.

இந்த நிலையில் ராணி எலிசபெத் உடல், 'ஓக்' மரத்தில் செய்யப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, நேற்று அவருக்கு பிடித்தமான பால்மோரல் கோட்டையில் இருந்து கருப்பு நிற காரில் புறப்பட்டது. பால்மோரல் கோட்டையில் இருந்து அந்த கார் 175 மைல் தொலைவில் உள்ள ஸ்காட்லாந்து தலைநகரான எடின்பரோ நகருக்கு 6 மணி நேர பயணத்துக்கு பின்னர் நேற்று மாலை போய்ச் சேர்ந்தது.

வழியெங்கும் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் வரிசையில் அமைதியாக நின்று காரில் வைக்கப்பட்டிருந்த ராணியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ராணியின் உடல் எடுத்துச்செல்லப்பட்ட காரைத் தொடர்ந்து வந்த காரில் ராணியின் மகள் இளவரசி ஆனி வந்தார்.

எடின்பரோ நகருக்கு எடுத்துச்செல்லப்பட்ட ராணியின் உடல், அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. இன்று ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.

ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் இருந்து செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு ஒரு ஊர்வலம் நடத்தப்படுகிறது. தேவாலயத்தில் மன்னர் சார்லசும், அரச குடும்பத்தினரும் வழிபாட்டில் கலந்து கொண்டு, ராணியின் உடலைப்பெற்றுக்கொள்வார்கள். அதன் பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு 24 மணி நேரம் வைக்கப்படுகிறது.

நாளை செவ்வாய்க்கிழமையன்று ராணியின் உடலை அவரது மகளான இளவரசி ஆனி தனி விமானத்தில் லண்டன் எடுத்துச்செல்கிறார். அங்கு புதன்கிழமை முதல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடல் 4 நாட்கள் வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ராணியின் உடலுக்கு பல லட்சம் மக்கள் அஞ்சலி செலுத்த திரண்டு வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

மேலும் செய்திகள்