< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் மகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்
தேசிய செய்திகள்

ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் மகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

தினத்தந்தி
|
27 Oct 2023 1:17 AM IST

ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் மகனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தானில் நவம்பர் 25-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நேற்று அம்மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. கடந்த ஆண்டு, டிசம்பர் 21, 22 மற்றும் 24-ந்தேதிகளில் ராஜஸ்தான் அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஆசிரியர் பணிக்கான பொது அறிவு தேர்வு நடைபெற இருந்தது.

ஆனால், கேள்வித்தாள் முன்கூட்டியே ரகசியமாக வெளியானது. இதனால் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

ரூ.10 லட்சத்துக்கு விற்பனை

பின்னர் நடந்த விசாரணையில், தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த சிலருக்கு தலா ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம்வரை கேள்வித்தாள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து அலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது. மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை மந்திரியுமான கோவிந்த்சிங் தோடஸ்ராவுக்கு சொந்தமான ஜெய்ப்பூர், சிகார் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனை

தோடஸ்ரா, தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தவுசா மாவட்டம் மஹுவா தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் வேட்பாளருமான ஓம்பிரகாஷ் ஹட்லா உள்ளிட்ட சிலரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அசோக் கெலாட் மகன்

இதுபோல், மற்றொரு வழக்கில், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை நேற்று 'சம்மன்' அனுப்பியது.

ராஜஸ்தானை சேர்ந்த டிரிட்டன் ஓட்டல்ஸ், வர்தா எண்டர்பிரைசஸ் ஆகிய குழுமங்களின் அதிபர்கள் சிவசங்கர் சர்மா, ரத்தன்காந்த் சர்மா ஆகியோர் அன்னிய செலாவணி விதிமீறலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அவ்வழக்கு தொடர்பாக அவர்களுக்கு எதிராக சமீபத்தில் சோதனை நடத்தியது. அதில், ரூ.1 கோடியே 20 லட்சம் கருப்புப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரத்தன்காந்த் சர்மாவுக்கும், வைபவ் கெலாட்டுக்கும் இடையிலான தொடர்பு குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) ஜெய்ப்பூரிலோ அல்லது டெல்லியிலோ விசாரணைக்கு ஆஜராகுமாறு வைபவ் கெலாட்டுக்கு சம்மனில் உத்தரவிட்டுள்ளது.

கண்டனம்

இதற்கிடையே, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை 25-ந்தேதி அறிவித்தேன். மறுநாளே அமலாக்கத்துறை, தோடஸ்ரா, வைபவ் கெலாட் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.

ராஜஸ்தானில் அமலாக்கத்துறை நாள்தோறும் சோதனை நடத்துகிறது. பெண்கள், விவசாயிகள், ஏழைகள் என யாரும் காங்கிரஸ் அரசால் பலன் அடைந்துவிடக்கூடாது என்று பா.ஜனதா விரும்புகிறது என்று அவர் கூறியுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

தேர்தல் வந்தவுடன், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித்துறை ஆகியவை பா.ஜனதாவின் தொண்டர்களாக மாறிவிடுகின்றன. ராஜஸ்தானில் தனது தோல்வி உறுதி என்று தெரிந்து விட்டதால், கடைசி காயை பா.ஜனதா நகர்த்துகிறது.

சத்தீஷ்காரை தொடர்ந்து, ராஜஸ்தானில் அமலாக்கத்துறை பிரசாரத்தில் நுழைந்துள்ளது. மோடி அரசின் சர்வாதிகாரம், ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். பா.ஜனதாவுக்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்