< Back
உலக செய்திகள்
சீனாவுடன் பொருளாதார, ராணுவ உறவுகள் நன்றாக உள்ளன: ரஷிய அதிபர் புதின்
உலக செய்திகள்

சீனாவுடன் பொருளாதார, ராணுவ உறவுகள் நன்றாக உள்ளன: ரஷிய அதிபர் புதின்

தினத்தந்தி
|
17 April 2023 7:11 AM IST

சீனாவுடனான பொருளாதார மற்றும் ராணுவ உறவுகள் நன்றாக உள்ளன என ரஷிய அதிபர் புதின் கூறியுள்ளார்.

மாஸ்கோ,

உக்ரைனுக்கு எதிராக ரஷியா படையெடுப்பை நடத்தி ஓராண்டாகியும் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனினும், போரானது தீவிரமுடன் நீடித்து வருகிறது.

நேட்டோவில் உக்ரைன் உறுப்பினராக அல்லாத சூழலில், அந்நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அமெரிக்காவும் ஆயுதம் மற்றும் நிதியுதவிகளை செய்து வருகிறது.

இந்த சூழலில், சீன பாதுகாப்பு மந்திரி லி ஷாங்பூ ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது, ரஷிய அதிபர் புதினை மாஸ்கோ நகரில் சந்தித்து பேசினார்.

அவரை கைகுலுக்கி வரவேற்ற புதின் பல்வேறு விசயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பில், ரஷியாவின் பாதுகாப்பு துறை மந்திரியான செர்கெய் சொய்குவும் கலந்து கொண்டார்.

சீன பாதுகாப்பு மந்திரியுடனான சந்திப்பு பற்றி குறிப்பிட்ட அதிபர் புதின், இரு நாடுகள் இடையே பொருளாதார, சமூக, கலாசார மற்றும் கல்வி பிரிவுகள் மற்றும் ராணுவம் என அனைத்து துறைகளிலும் நட்புறவு சிறந்த முறையில் வளர்ச்சி கண்டு வருகிறது என கூறியுள்ளார்.

ரஷியாவுக்கான சீன பாதுகாப்பு மந்திரியின் பயணம் பற்றி கடந்த வாரம் சீன அரசு அறிவித்தது. இந்த பயணத்தில் அவர் ரஷிய பாதுகாப்பு அதிகாரிகளை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டது. எனினும் புதினுடனான சந்திப்பு பற்றி குறிப்பிடவில்லை.

சீன அதிபர் ஜின்பிங் கடந்த மாதம் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டு புதினை நேரில் சந்தித்து பேசினார். உக்ரைனுடனான ரஷிய போர் நடந்து வரும் சூழலில், சீனா நடுநிலைமையுடன் செயல்படுகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. எனினும், ரஷியா மற்றும் சீனா என இரு நாடுகளும் தங்களது நட்புறவில் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது என்றும் அறிவித்தன.

மேலும் செய்திகள்