உக்ரைன்-ரஷியா போர் எதிரொலி; உரங்களின் விலை உயர்வால் மெக்சிகோவில் விவசாயம் பாதிப்பு
|உரங்கள் தட்டுப்பாடு, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், மெக்சிகோவில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மெக்சிகோ சிட்டி,
உலக அளவில் அதிகமாக உரங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக ரஷியா உள்ளது. இந்நிலையில் ரஷியா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் உரங்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக இறக்குமதி உரங்களை அதிகம் சார்ந்திருக்கும் மெக்சிகோ நாட்டில், விவசாயிகள் தற்போது அதிக விலை கொடுத்து உரங்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களின் வருமானத்தை வெகுவாக குறைத்துள்ளது.
அங்கு ஒரு மூட்டை உரத்தின் விலை சுமார் 70 டாலர்களாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கொரோனா பாதிப்பு, தீவிரமான வானிலை, உரங்கள் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணத்தால், மெக்சிகோவில் தற்போது உணவு பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
உள்நாட்டிலேயே உரங்கள் தயாரிப்பது, விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் மெக்சிகோ அரசு இந்த பிரச்சினையை தீர்க்க தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அந்நாட்டு விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.