< Back
உலக செய்திகள்
அபுதாபி இந்திய தூதரகத்தின் பெயரில் இ-மெயில் அனுப்பி மோசடி - பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
உலக செய்திகள்

அபுதாபி இந்திய தூதரகத்தின் பெயரில் இ-மெயில் அனுப்பி மோசடி - பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
13 July 2024 5:51 PM GMT

போலியான இ-மெயிலை பயன்படுத்தி ஏமாற்றி வருபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி,

அபுதாபி இந்திய தூதரகத்தின் பெயரில் போலியான இ-மெயில் அனுப்பி மோசடி சம்பவம் அரங்கேறுகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 36 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். மேலும் அமீரகத்துக்கு வேலைவாய்ப்பு தேடி பலர் விசிட் விசாவில் வருகின்றனர். இவ்வாறு வேலைதேடி வரும் இளைஞர்களையும், பொதுமக்களையும் குறிவைத்து ஒரு சிலர் இந்திய தூதரகத்தின் பெயரில் போலியான வகையில் இ-மெயிலை உருவாக்கியுள்ளனர்.

இந்த போலியான இ-மெயில் முகவரி indian_emb@outlook.com ஆகும். இந்த முகவரியில் இருந்து வேலைதேடி வருபவர்களுக்கு உதவி செய்வது போல் தகவல் அனுப்புகின்றனர். அதற்காக அவர்களிடம் சேவை கட்டணம் வசூலிக்கின்றனர். இதனை உண்மை என நம்பி அவர்களிடம் சேவை கட்டணம் என்ற பெயரில் பலர் பணத்தை செலுத்தியுள்ளனர்.

இதேபோல் வேலை செய்யும் நிறுவனங்களில் சம்பளம் வழங்கப்படாமல் இருப்பவர்களிடம் அவர்களது பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அவர்களுக்கு உதவிடுவது போல் இ-மெயில் அனுப்புகின்றனர். இந்த தகவல் உண்மை என நம்பி பலர் ஏமாற்றமடைந்துள்ளனர். இது தொடர்பாக இந்திய தூதரகத்திடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்திய தூதரகத்தின் இ-மெயில், 'எக்ஸ்', பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் https://indembassyuae.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் உள்ளது. மேலும் தூதரகத்தின் இ-மெயில்கள் அனைத்தும் @mea.gov.in என்ற டொமைனில் முடிவடையும். எனவே இந்திய தூதரகத்தில் இருந்து யாராவது இ-மெயில் அனுப்பும் போது அதில் சந்தேகம் இருந்தால் தூதரகத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பார்த்து சரிபார்த்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் பொதுமக்கள் ஏமாறுவதை தவிர்க்க முடியும். மேலும் இந்திய தூதரகத்தில் இருந்து இ-மெயில் அனுப்பியுள்ளதாக யாராவது தெரிவித்தால் அது தொடர்பாக தூதரகத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். போலியான இ-மெயிலை பயன்படுத்தி ஏமாற்றி வருபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தவறான வழியில் செயல்பட நினைப்பவர்கள் அத்தகைய செயலில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்படுகின்றனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்