"விமான போக்குவரத்தில் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" - துபாய் விமான நிலைய தலைமை செயல் அதிகாரி
|கனமழையால் விமான போக்குவரத்தில் ஏற்பட்ட சிரமத்திற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக துபாய் சர்வதேச விமான நிலைய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
துபாய்,
அமீரகத்தில் கடந்த 16-ந் தேதி பெய்த வரலாறு காணாத மழையால் அமீரகம் ஸ்தம்பித்தது. இதில் துபாய், சார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியது. கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழை பெய்ததால் பல முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. பொதுமக்கள் வாகனங்களில் வெளியே செல்ல முடியாத நிலை இருந்த வந்த நிலையில் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது.
கனமழையால் துபாயின் சர்வதேச விமான நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. விமான ஓடுபாதையில் சூழ்ந்த வெள்ளம் காரணமாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக ஏர் இந்தியா, இன்டிகோ, பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம், எகிப்து ஏர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் போன்ற சில வெளிநாட்டு விமான நிறுவனங்களும் வெள்ளத்தில் மூழ்கிய ஓடுபாதையில் நிலைமை சீராகும் வரை விமானங்களை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையம் இயல்பான செயல்பாடுகளுக்கு திரும்ப கடுமையாக செயலாற்றி வருகிறது. இந்த நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கவும், இயல்பான செயல்பாடுகளை விரைவாக மீட்டெடுக்கவும் துணை நிறுவனங்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு பெறப்பட்டு வருவதாக துபாய் சர்வதேச விமான நிலையம் அறிவித்தது.
ஆனாலும் முழுமையான செயல்பாட்டுக்கு சர்வதேச விமான நிலையம் இன்னும் வரவில்லை. இந்த நிலையில் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் தலைமை செயல் அதிகாரி பால் கிரிப்பித்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சூழ்நிலையின் விளைவுகளில் இருந்து மீண்டு வர பல்வேறு வழிகளில் செயல்பட்டு வருகிறோம். அமீரகத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும். எங்களது விருந்தினர்கள் (பயணிகள்) மற்றும் சக ஊழியர்களுக்கும் இந்த சூழ்நிலை பெரும் இடையூறு விளைவித்துள்ளது. எங்களது முயற்சிகள் மூலமாக விருந்தினர்களின் நலன் மற்றும் சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமான அட்டவணையில் விமானங்கள் இயக்கப்படுவதில் கவனம் செலுத்தி வருகிறோம். இதனால் பயணிகள் முடிந்தவரை விரைவாக தங்கள் பயணத்தை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனித்துவமான சவால்களையுடைய பிரதேசம் இதுவாகும். ஒட்டு மொத்த விமான நிலைய பணிக்குழுவினர், வர்த்தக கூட்டு நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் அயராது உழைத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் முன்னோக்கி சென்று உறுதியுடன் பணியாற்றுகிறோம். இந்த சவாலான நேரத்தில் எங்களது விருந்தினர்கள் அளித்த பொறுமையும், ஒத்துழைப்பும் பாராட்டத்தக்கது. இந்த சூழ்நிலையால் அவர்களுக்கு ஏற்பட்ட விரக்தி மற்றும் சிரமத்துக்கு நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கு எனது நன்றி.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.