வெள்ளை மாளிகையை பரபரப்பாக்கிய விபத்து.. நுழைவு வாயில் மீது கார் மோதி டிரைவர் உயிரிழப்பு
|15-வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ என்.டபுள்யூ சந்திப்பில் உள்ள பாதுகாப்பு தடையில் வாகனம் மோதியதாக வாஷிங்டன் பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அதிபர் வசிக்கக்கூடிய வெள்ளை மாளிகை பல அடுக்கு பாதுகாப்பு கொண்டது. வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற சுற்றுச்சுவரை ஒட்டி சாலை உள்ளது. இந்த சாலையில் நேற்று இரவு அதிவேகமாக வந்துகொண்டிருந்த ஒரு கார், திடீரென வெள்ளை மாளிகையின் நுழைவு வாயில் நோக்கி பாய்ந்து வந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் சுதாரிப்பதற்குள் அந்த கார், பாதுகாப்பு தடை மீது மோதி நொறுங்கியது.
காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 15-வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ என்.டபுள்யூ சந்திப்பில் உள்ள பாதுகாப்பு தடையில் வாகனம் மோதியதாக வாஷிங்டன் பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இது பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் வெள்ளை மாளிகை வளாகம் பரபரப்பானது. பாதுகாப்பு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் நடந்தது விபத்துதான் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் ரகசிய சேவை தெரிவித்துள்ளது.