< Back
உலக செய்திகள்
உக்ரைன் தலைநகரில் ரஷியா சரமாரி ஏவுகணை வீச்சு: 10 பேர் பலி

Image Courtacy: AFP

உலக செய்திகள்

உக்ரைன் தலைநகரில் ரஷியா சரமாரி ஏவுகணை வீச்சு: 10 பேர் பலி

தினத்தந்தி
|
10 Oct 2022 11:25 PM GMT

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பலியாகினர்.

கீவ்,

உக்ரைன் நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது.

ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைப்பதாக கூறி போரை தொடங்கிய ரஷியா பின்னர் மின்உற்பத்தி நிலையங்கள், குடியிருப்பு கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் என தாக்குதல்களை விரிவுப்படுத்தியது.

போர் தொடங்கிய சமயத்தில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷிய படைகள் முயற்சித்த நிலையில் உக்ரைன் ராணுவ வீரர்களின் கடுமையான எதிர்ப்பால் ரஷிய படைகள் அங்கிருந்து பின்வாங்கின.

அதை தொடர்ந்து தலைநகர் கீவில் பல மாதங்களாக அமைதியான சூழல் நிலவி வந்த நிலையில் நேற்று காலை கீவ் நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷியா கடுமையான தாக்குதல்களை நடத்தியது.

கீவ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள், வணிக கட்டிடங்கள், பொழுதுபோக்கு இடங்கள் என பொதுமக்களை இலக்காக வைத்து 80-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷிய படைகள் வீசின.

இதில் பாதிக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் உக்ரைன் படைகளால் நடுவழியில் இடைமறித்து அழிக்கப்பட்டபோதிலும் எஞ்சிய ஏவுகணைகள் கீவ் நகரின் பல பகுதிகளை பற்றி எரிய வைத்தன.

ரஷிய படைகளின் சரமாரியான ஏவுகணை வீச்சில் எண்ணற்ற கட்டிடங்களும் வாகனங்களும் தீக்கிரையாகின. இதனால் நகரில் எங்கு தீப்பிளம்பாக காட்சியளித்தன.

சமீபத்திய மாதங்களில் உக்ரைன் மீது ரஷியா நடத்திய மிகவும் பயங்கரமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் பலியானதாகவும்,

60-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் கீவ் நகர அதிகாரிகள் கூறினர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியா தீபகற்பத்தையும் ரஷியாவையும் இணைக்கும் பாலத்தில் நடந்த பயங்கர குண்டு வெடிப்புக்கு உக்ரைன்தான் காரணம் என ரஷிய அதிபர் புதின் குற்றம் சாட்டிய சில மணி நேரத்தில் கீவ் நகர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்