அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னோட்டம்.. டிரம்ப்-கமலா ஹாரிஸ் இன்று நேருக்கு நேர் விவாதம்
|ஜூன் மாதம் நடந்த நேரடி விவாதத்திற்கு பிறகு, தேர்தல் பிரசார களம் முற்றிலும் மாறிவிட்டது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதித்துக்கொள்வது வழக்கம். தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த விவாதம், தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். விவாதத்தின்போது நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும், ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் வேட்பாளர்கள் தங்கள் கருத்தை முன்வைப்பார்கள். எதிர் வேட்பாளரின் குறைகளையும் எடுத்துரைப்பார்கள். இதன்மூலம் மக்களின் செல்வாக்கை பெற முடியும்.
அவ்வகையில், ஏ.பி.சி. நியூஸ் சார்பில் இன்று கமலா ஹாரிஸ், டிரம்ப் பங்கேற்கும் நேரடி விவாதம் நடைபெறுகிறது. பிலடெல்பியாவில் உள்ள தேசிய அரசியலமைப்பு மையத்தில் உள்ளூர் நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு (இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணி) விவாதம் தொடங்குகிறது.
இந்த விவாதம் தேர்தல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் ஜூன் மாதம் நடந்த நேரடி விவாதத்திற்கு பிறகு, பிரசார களம் முற்றிலும் மாறிவிட்டது. டிரம்புடனான நேரடி விவாதத்தின்போது மோசமான செயல்திறனைத் தொடர்ந்து ஜோ பைடன் போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்குப் பதில் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டார். டிரம்ப் ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பினார்.
டிரம்ப்க்கு எதிரான வழக்குகள் தொடர்பாக, பைடன் முன்வைத்ததைவிட கமலா ஹாரிஸ் ஆணித்தரமாக முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த தேர்தலில் போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர் என்று ஹாரிஸ் வாதிடுவார். அதேசமயம் கமலா ஹாரிசை மிகவும் தாராளவாதியாக சித்தரிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். எனவே, இன்றைய விவாதத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. அமெரிக்காவில் இன்று இரவும், இந்தியாவில் நாளை காலையிலும் இந்த நிகழ்வு ஒளிபரப்பாகிறது.