நெல்சன் மண்டேலாவை போல் நான் சிறைக்கு செல்வேன் - டிரம்ப் சொல்கிறார்
|அரசியல் காரணங்களுக்காக குறிவைக்கின்றனர் என்றும் நெல்சன் மண்டேலாவை போல் நான் சிறைக்கு செல்வேன் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் இரு கட்சிகளின் சார்பிலும் மேலும் பலர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். எனவே ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெறவேண்டும்.
இருக்கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் கட்சியின் வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த நிலையில் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் நடைபெறும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் டிரம்ப் தனது பெயரை பதிவு செய்தார். அதை தொடர்ந்து அவர் பேரணியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
அரசியல் காரணங்களுக்காக என்னையும் எனது வணிகங்களையும் ஜனாதிபதி ஜோ பைடன் அரசு குறிவைக்கிறது. நான் நெல்சன் மண்டேலாவாக இருப்பதை பற்றி கவலைப்படவில்லை, ஏனென்றால் நான் அதை ஒரு காரணத்திற்காக செய்கிறேன்.
நாம் கையாளும் இந்த விரோதிகள் மற்றும துரோகிகளிடம் இருந்து நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். அவர்கள் கொடூரமான மனிதர்கள், அவர்கள் நம் நாட்டை அழிக்கிறார்கள்.
மோசமான விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் நாம் தொடர்ந்து முன்னேறி செல்வோம். நாட்டைப் பாதுகாக்க என்னை மீண்டும் வெள்ளை மாளிகைக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு டிரம்ப் பேசினார்.