< Back
உலக செய்திகள்
காசா மக்களுக்கு உதவ எல்லை தாண்டி வந்தார்களா எகிப்தியர்கள்..?  உண்மை இதுதான்!
உலக செய்திகள்

காசா மக்களுக்கு உதவ எல்லை தாண்டி வந்தார்களா எகிப்தியர்கள்..? உண்மை இதுதான்!

தினத்தந்தி
|
14 Oct 2023 11:48 AM IST

எகிப்தைச் சேர்ந்த மக்கள் எல்லை தாண்டி வந்து காசா பகுதி மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுப்பதாக கூறி, ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இஸ்ரேல்- ஹமாஸ் போர் 8வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் காசாவில் இருந்து இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவி நடத்திய திடீர் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. காசாவில் தொடர்ந்து குண்டுமழை பொழிவதால் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

வடக்கு காசாவில் உள்ள சுரங்க பாதைகளில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருக்கலாம் என கருதுவதால், அங்கு தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்காக அங்குள்ள மக்களை வெளியேறும்படி எச்சரித்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி காசாவின் தெற்கு பகுதி மற்றும் எகிப்து எல்லை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், எகிப்தைச் சேர்ந்த மக்கள் எல்லை தாண்டி வந்து காசா பகுதி மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுப்பதாக கூறி, ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் மக்கள் சாரை சாரையாக சாக்கு பைகளை சுமந்தபடி செல்வது பதிவாகியிருக்கிறது. இவர்கள் பாலஸ்தீனத்திற்கு தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை வழங்குவதற்காக பாலஸ்தீன எல்லையை கடக்கும் எகிப்தியர்கள் என்றும், போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடனும் அந்த வீடியோவை சிலர் ஷேர் செய்திருந்தனர்.

வீடியோவை பார்த்தவர்கள், மக்கள் படும் துயரம் குறித்து கவலை தெரிவித்ததுடன், போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர். சிலர் அந்த வீடியோ போலியானது என தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த வீடியோ எங்கு, எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து கூகுள் மூலம் ஆய்வு செய்ததில், அந்த வீடியோவானது, இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு பரவியது தெரியவந்தது. எகிப்து-லிபியா எல்லையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தலைப்புடன் அந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.

குறிப்பாக அப்துல்காதர் ஆசாத் என்ற பத்திரிகையாளர் கடந்த மாதம் 7ம் தேதி இந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார். அதில், நூற்றுக்கணக்கான எகிப்தியர்கள் எல்லை வழியாக லிபியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதாக குறிப்பிட்டிருந்தார்.

எனவே, தற்போது பரவி வரும் வீடியோவுக்கும், இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்