< Back
உலக செய்திகள்
துருக்கியை பழி தீர்த்ததா பாகிஸ்தான்...? வெள்ள நிவாரண பொருட்களை பொட்டலம் கட்டி திருப்பி அனுப்பிய அவலம்
உலக செய்திகள்

துருக்கியை பழி தீர்த்ததா பாகிஸ்தான்...? வெள்ள நிவாரண பொருட்களை பொட்டலம் கட்டி திருப்பி அனுப்பிய அவலம்

தினத்தந்தி
|
18 Feb 2023 3:10 PM IST

துருக்கி அளித்த வெள்ள நிவாரண பொருட்களை, துருக்கி நிலநடுக்க உதவி பொருட்களாக பாகிஸ்தான் திருப்பி அனுப்பிய அவலம் தெரிய வந்து உள்ளது.



கராச்சி,


துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ந்தேதி அதிகாலை வரலாறு காணாத அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.

ரிக்டர் அளவுகோலில் 7.8 மற்றும் 7.2 என அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டு கட்டுகள் போன்று சரிந்தன.

இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 100-க்கும் மேற்பட்ட நிலநடுக்கமும் ஏற்பட்டு உள்ளது.

நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 45 ஆயிரம் எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

எனினும், நிலநடுக்கம் ஏற்பட்டு 11 நாட்கள் ஆன நிலையில், மீட்பு குழுவினர் விடாமுயற்சியுடன் தொடர்ந்து பணியை தொடர்ந்து வருகின்றனர். துருக்கிக்கு தொடக்கத்தில் இருந்து இந்தியா, மருத்துவ பொருட்கள், குளிர்கால போர்வை, விரிப்பு உள்ளிட்ட பல்வேறு நிலநடுக்க நிவாரண பொருட்களை விமானங்களில் தொடர்ந்து அனுப்பி வருகிறது. வேறு சில நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜி.என்.என். என்ற செய்தி சேனலில், அந்நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் ஷாகித் மசூத் என்பவர் கூறும்போது, துருக்கிக்கு சமீபத்தில் சென்றடைந்த நிலநடுக்க நிவாரண உதவியானது, பாகிஸ்தானுக்கு கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது துருக்கி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டவை என அதிரடி தகவலை வெளியிட்டு உள்ளார்.

துருக்கி அனுப்பிய வெள்ள நிவாரண பொருட்களை, பாகிஸ்தான் என்ற பெயரிலான ஸ்டிக்கர் ஒட்டி துருக்கிக்கே நிலநடுக்க நிவாரண பொருட்கள் என திரும்ப அனுப்பி உள்ளது என அவர் கூறியுள்ளார்.

இது பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது. ஏனெனில், நிலநடுக்கம் பாதித்த துருக்கியின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார்.

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, தொடக்கத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்குவதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், துருக்கி நாட்டின் அங்காரா நகருக்கு செல்ல இருக்கிறார். நிலநடுக்கம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார் என பாகிஸ்தானின் தகவல் மந்திரி மரியும் அவுரங்கசீப் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டது.

இதற்காக பாகிஸ்தானில் நடைபெற இருந்த அனைத்து கட்சி மாநாடு ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டணியினருடன் ஆலோசித்து அடுத்த தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

இதேபோன்று, துருக்கியில் நிலநடுக்க பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரதம மந்திரி நிவாரண நிதியை உருவாக்கி அந்நாட்டுக்கு வழங்க முடிவானது. இதன்படி, ஒரு மாத கால சம்பளம் நன்கொடையாக வழங்கப்படும் என பாகிஸ்தான் அமைச்சரவை அறிவித்தது.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நமது சகோதர நாடான துருக்கிக்கு மனமுவந்து உதவும்படி கேட்டு கொண்டுள்ளார் என மற்றொரு டுவிட்டர் பதிவில் மந்திரி மரியும் பதிவிட்டார்.

எனினும், ஷெரீப்பின் துருக்கி பயணம் ஒத்தி போடப்பட்டது. இதுபற்றி தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி நிறுவனம் சார்பில் வெளியான தகவலில், நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் தெளிவற்ற வானிலையால், ஹெலிகாப்டர் இறங்குவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது என பாகிஸ்தான் தரப்பு தெரிவிக்கின்றது.

நிவாரண பணிகளில் துருக்கி அதிபர் ரீசெப் தயீப் எர்டோகன் மற்றும் பிரதமர் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில், ஷெபாஸ் ஷெரீப்பை அங்காராவில் வரவேற்க முடியாத சூழல் காணப்படுகிறது என செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

நட்பு நாட்டிற்கு பாகிஸ்தான் உதவி கரம் நீட்ட முன்வந்தும் அதனை வரவேற்க துருக்கி தயாராகாத சூழலில், தற்போது இதுபோன்ற செய்திகள் வெளிவந்து உள்ளன. இதனால், துருக்கியை பாகிஸ்தான் ஏதோ ஒரு வகையில் பழிதீர்த்து கொண்டதா? என்றும் அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. இது உலக நாடுகளில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்