< Back
உலக செய்திகள்
ஹமாஸ் அமைப்பின் 150 பதுங்கு குழிகள் அழிப்பு; இஸ்ரேல் பாதுகாப்பு படை அதிரடி தாக்குதல்
உலக செய்திகள்

ஹமாஸ் அமைப்பின் 150 பதுங்கு குழிகள் அழிப்பு; இஸ்ரேல் பாதுகாப்பு படை அதிரடி தாக்குதல்

தினத்தந்தி
|
28 Oct 2023 2:59 PM IST

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் 150 பதுங்கு குழிகளை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்கி அழித்தனர்.

காசா முனை,

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்தது. இசை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் உள்பட எல்லை பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டது.

இந்த சம்பவத்தில், 260 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அந்த அமைப்பு 210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 22-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் இன்றும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், வடக்கு காசா முனை பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் போர் விமானங்களின் உதவியுடன், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் 150 பதுங்கு குழிகளை இலக்காக கொண்டு அதிரடி தாக்குதல்களை தொடுத்துள்ளது.

இந்த தாக்குதல்களில் பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். எதிரிகளின் சுரங்கங்கள், பதுங்கு குழி பகுதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

இஸ்ரேல் தாக்குதல்களால் இன்டர்நெட் மற்றும் தொலைபேசி சேவைகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளால், காசாவில் இருந்து பாலஸ்தீனம் சார்ந்த அறிக்கைகள் எதுவும் அதிகம் வரவில்லை.

எனினும், தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இஸ்ரேல் படையின் தீவிர தாக்குதல்களால் இரவு முழுவதும் காசா எல்லை பகுதியருகே, ஆஷ்கெலான் நகரில், அதிக அளவில் வெடிகுண்டு சத்தம், பெரிய ரக துப்பாக்கிகளின் தொடர்ச்சியான சத்தம், போர் விமானங்களின் தாக்குதல் சத்தம் ஆகியவை கேட்டு கொண்டே இருந்தன.

தொடர்ந்து இரவு முழுவதும் காசா முனை பகுதியில் இஸ்ரேல் படைகளுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன என தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இதில் வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த அதிரடி தாக்குதலில், பல்வேறு ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என படையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்