< Back
உலக செய்திகள்
அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உலக செய்திகள்

'அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம்' - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

தினத்தந்தி
|
24 Jun 2023 5:48 PM IST

ரஷியாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

கீவ்,

கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுத்தது. இந்த போர் முடிவுக்கு வராமல் 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் தற்போது ரஷியா புது சிக்கலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ரஷியாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில், உக்ரைனுக்கு எதிராக ரஷிய நாட்டிற்கான தனியார் ராணுவ படை போரிட்டு வந்தது. இந்நிலையில் ரஷிய ராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரஷியாவிற்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சிக்கு பிரிகோசின் அழைப்பு விடுத்திருக்கிறார்.

தற்போது ரஷியாவின் தெற்கில் உள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் உள்ள ரஷிய ராணுவ படைகள், தனது கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதாக அவர் கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், "கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் அறிவித்திருக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சியிலிருந்து நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாப்போம். இந்தக் கலகம் எங்களுக்கு ஒரு கொடிய அச்சுறுத்தல். இதற்கு பதிலளிக்கும் விதமாக கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிளர்ச்சிக்கு காரணமானவர்கள் அனைவரும் தவிர்க்க முடியாத தண்டனையை அனுபவிப்பார்கள்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம். ரஷியாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உக்ரைனில் எத்தனை நாட்கள் தனது படைகளை வைத்துள்ளதோ, அவ்வளவு பெரிய பிரச்சினை ரஷியாவிற்கு ஏற்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்