பத்திரிகையாளருக்கு அனுமதி மறுப்பு; மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை
|ரஷிய மந்திரியின் நிகழ்ச்சியை படம் பிடிக்க அவருடன் நிருபர்கள் செல்வதற்கு அமெரிக்கா அனுமதி மறுத்த நிலையில், இதனை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம் என ரஷியா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மாஸ்கோ,
ஐ.நா. சபையில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை படம் பிடிப்பதற்காக அவருடன் ரஷியா பத்திரிகையாளர்களும் செல்ல இருந்தனர்.
எனினும், இதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளிக்காததுடன், அவர்களுக்கான விசா வழங்கவும் மறுத்து விட்டது. இதற்கு எதிர்வினையாற்றிய லாவ்ரவ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், இதுபோன்ற விசயங்களில் நம்முடைய அமெரிக்க சகாக்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது பற்றி நிச்சயம் எனக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் இந்த விசயத்தில் அப்படி இருக்காது என்று உறுதியாக இருந்தேன். அது தவறாகி விட்டது என தெரிவித்து உள்ளார். அந்த நாடு தங்களை வலிமையானவர்கள், திறமையானவர்கள், சுதந்திர தன்மை கொண்டவர்கள் என கூறி கொண்டு, கோழையாக நடந்து கொண்டு உள்ளது.
பேச்சு சுதந்திரம் மற்றும் தகவலை பெறுவது ஆகியவற்றை பாதுகாப்பதில் அவர்களது சூளுரைத்தது என்ன என அவர்கள் காட்டி விட்டார்கள்.
ரஷியா இன்னும் நிறைய பணியாற்ற வேண்டும். அதிக ஆற்றலை காட்ட வேண்டும். உலக சமூகம் மற்றும் பொதுமக்களிடம் உண்மையை கொண்டு வருவதற்கு இன்னும் அதிக முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்த அவர், நாங்கள் இதனை மறக்கவோ அல்லது மன்னிக்கவோ மாட்டோம் என உறுதி செய்து கொள்ளுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.