இந்திய-அமெரிக்க முப்படை தலைமை தளபதிகள் தொலைபேசியில் பேச்சு
|இந்திய-அமெரிக்க முப்படை தலைமை தளபதிகள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வாஷிங்டன்,
இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் அமெரிக்க கூட்டுப்படைகளின் தலைவர் மார்க் மிலே இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது, பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சூழல் நிலவரங்களை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். மேலும் இருதரப்பு ராணுவ உறவுகள் மற்றும் இயங்குதன்மை ஆகியவற்றை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதித்ததாக அமெரிக்க கூட்டுப்படைகளின் துணை செய்தி தொடர்பாளர் ஜோசப் ஹால்ஸ்டட் கூறியுள்ளார்.
அமெரிக்காவும், இந்தியாவும் வலுவான ராணுவ உறவை பகிர்ந்து கொள்வதாக கூறிய அவர், சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பராமரிப்பதில் முக்கிய பிராந்திய தலைவராகவும், முக்கிய பங்காளியாகவும் இந்தியா விளங்குவதாகவும் தெரிவித்தார். இந்திய எல்லையில் அவ்வப்போது சீன படைகளின் அத்துமீறல்கள் நடந்து வரும் சூழலில் இந்திய-அமெரிக்க முப்படைகளின் தலைமை தளபதிகள் தொடர்பு கொண்டு பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.