மூத்த ராணுவ அதிகாரி மீது அவதூறு; இம்ரான் கான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் ராணுவம் வலியுறுத்தல்
|பாகிஸ்தானின் மூத்த ராணுவ அதிகாரி மீது அவதூறு குற்றச்சாட்டு கூறியதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி அரசிடம் பாகிஸ்தான் ராணுவம் கேட்டு கொண்டுள்ளது.
லாகூர்,
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருவதுடன், அடுத்தடுத்து பெரும் பேரணிகளையும் நடத்தி வருகிறார். இதேபோன்றதொரு நீண்ட பேரணி சமீபத்தில் நடந்தது.
இதன்படி, பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றிருந்தபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, காயமடைந்தார். இதனை தொடர்ந்து, லாகூரில் உள்ள அவரது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அவர் ஆஸ்பத்திரியில் இருந்தபடி நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, என்னை கொல்ல திட்டமிட்டுள்ளனர் என்பது தாக்குதல் நடப்பதற்கு முந்தைய நாளே எனக்கு தெரியும். வெளியே செல்ல வேண்டாம் என்று என்னிடம் அறிவுறுத்தப்பட்டது.
பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை மந்திரி ராணா சனுல்லா மற்றும் உளவுத்துறையின் தலைவர் பைசல் ஆகியோரே இந்த சதிக்கு பின்னால் இருக்கிறார்கள். இந்த நாட்டை காப்பாற்ற ராணுவ தளபதி மற்றும் தலைமை நீதிபதியை கேட்டு கொள்கிறேன் என கூறினார்.
இந்த சூழலில், மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் மீது அவதூறு குற்றச்சாட்டு கூறியதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு மத்திய அரசிடம் பாகிஸ்தான் ராணுவம் கேட்டு கொண்டுள்ளது.
ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையிலான அடிப்படையற்ற மற்றும் பொறுப்பற்ற முறையில் இம்ரான் கான் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதனை ஏற்று கொள்ள முடியாது என உளவு பிரிவின் இயக்குனர் ஜெனரல் கூறியுள்ளார்.