ஒடிசா ரெயில் விபத்து செய்தியால் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்... ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா
|ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரங்கல் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 35 தமிழர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது;
"ஒடிசா மாநிலத்தில் ரெயில் விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலி மற்றும் காயம் அடைந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். ஜப்பான் அரசு மற்றும் மக்கள் சார்பாக, உயிர் இழந்தவர்களுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.