ஆழ்கடல் அதிசயம்... பெண் விஞ்ஞானியை மர்ம இடத்திற்கு அழைத்து சென்ற ஆக்டோபஸ்: வீடியோ வைரல்
|கடலில், மனிதரை பார்த்ததும் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில், ஆக்டோபஸ் செய்த செயல் அடங்கிய வீடியோ வைரலாகி உள்ளது.
நியூயார்க்,
சமூக ஊடகங்களில் ஆச்சரியம் அளிக்கும் பல்வேறு விசயங்கள் பகிரப்படுவதுண்டு. செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என நாம் அறிந்திராத பல வினோத தகவல்களை கொண்டிருக்கும். அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்று காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆழ்கடலில் பல அதிசய உயிரினங்கள் வசித்து வருகின்றன. அவற்றை பற்றியும், அவற்றின் வாழ்க்கை முறைகள், வசிப்பிடங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானிகள் கடலுக்குள் செல்வதுண்டு.
அப்படி பெண் விஞ்ஞானி ஒருவர் கடலின் ஆழத்தில் சென்றபோது, ஆச்சரியம் தரும் விசயம் ஒன்று நடந்து உள்ளது. அவர், நீந்தி செல்வதற்கேற்ற ஆடை மற்றும் பிராணவாயு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன், கைகள் மற்றும் கால்களை மூடியபடி சென்றுள்ளார்.
அவர் கடலின் ஆழத்தில் இருந்தபோது, ஆக்டோபஸ் எனப்படும் உயிரினம் அவரை சுற்றி, சுற்றி வந்துள்ளது. இந்த ஆக்டோபசுக்கு 8 கரங்கள் உண்டு. அவற்றில் விஷ சுரப்பிகள் இருக்கும். இரையை எளிதில் கொல்ல அவற்றை பயன்படுத்தும்.
ஆழ்கடலில் அவை வசிக்க கூடியவை. இந்நிலையில், அந்த ஆக்டோபஸ் இந்த பெண்ணின் கையை பிடித்து, இழுத்துள்ளது. பின்னர் அது ஒரு பகுதியை நோக்கி கடலுக்குள் முன்னேறி சென்றது. அவரும் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் முன்னே சென்ற ஆக்டோபஸ், அந்த பெண் பின்னால் வருகிறாரா? என்பதற்காக சற்று நின்று திரும்பி கவனிக்கிறது. அவர் வருவது உறுதியானதும் மீண்டும் செல்கிறது.
இறுதியாக, 2 உலோக கம்பிகளின் நடுவே தரையில் கல் பொருத்தப்பட்ட ஒரு பகுதிக்கு செல்கிறது. அதன் பின்புறம் சென்று காட்டுகிறது. அந்த கல்லின் மையத்தில் ஆண் ஒருவர் கையில் நாய் குட்டியுடன் இருக்கும் படம் ஒன்று காட்சியளிக்கிறது.
அந்த படத்தில் இருப்பவர் ஆழ்கடலில் ஆய்வு செய்ய சென்ற நபரின் நண்பருடைய தந்தை. அதன் செயல் அந்த பெண்ணை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இதுபற்றி அந்த பெண் விஞ்ஞானி கூறும்போது, உணர்ச்சி வசப்பட்ட தருணமது. இந்த புத்திசாலியான உயிரினம் என்னை அந்த பகுதிக்கு அழைத்து சென்றது.
உங்களை போன்ற மனிதரை அது அடையாளம் கண்டு கொண்டதா? என்பன போன்ற நிறைய கேள்விகள் எனக்குள் எழுந்தன. இதில் ஆச்சரியப்படக்கூடிய விசயம் என்னவென்றால், ஆக்டோபஸ் என்ன நினைக்கிறது என என்னால் யூகிக்கக்கூட முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.
எனினும், மனிதர் ஒருவரை பார்த்ததும் அவரை போன்ற உருவம் கொண்ட ஒருவரின் புகைப்படம் இருந்த பகுதிக்கு, அந்த பெண்ணின் கையை பிடித்து, ஆக்டோபஸ் இழுத்து சென்று அடையாளம் காட்டியது ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.