ஆயுத உற்பத்தி சரிவு; சீனாவை கட்டுப்படுத்தும் திறனற்ற அமெரிக்கா: அறிக்கை தகவல்
|ஆயுத உற்பத்தியில் ஏற்பட்ட சரிவால், சீனாவை கட்டுப்படுத்தும் திறனற்ற நிலையில் அமெரிக்கா உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.
வாஷிங்டன்,
சர்வதேச அளவில் பொருளாதார மற்றும் ராணுவ தலைமை கொண்ட நாடாக வளர்ந்து வரும் ஆவலில் சீனா உள்ளது. இந்த நிலையில், வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பல்வேறு துறைகளிலும் சீனா முன்னேறி வருகிறது.
தென்சீன கடல் பகுதியில் பிற நாடுகளை விட சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்கேற்ப கப்பலில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறது. தைவானை தனது கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால், தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு என தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், ஆசிய டைம்ஸ் செய்தி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட செய்தியில், புதிய வெடிபொருட்களை உற்பத்தி செய்வதில் அமெரிக்காவை சீனா முந்தி விட்டது என அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவில் வெடிபொருட்கள் மற்றும் உந்துசக்தியால் இயங்கும் பொருட்கள் போன்றவற்றின் தயாரிப்பு சீனாவுடன் ஒப்பிடும்போது சரிந்து விட்டது.
இதனை சமீபத்தில் போர்ப்ஸ் பத்திரிகையும் குறிப்பிட்டு இருந்தது. புதிய வகை வெடிபொருட்கள், அவற்றில் குறிப்பிடும்படியாக 1980-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சி.எல்.-20 என்ற சக்தி வாய்ந்த வெடிபொருள் உற்பத்தியில் அமெரிக்காவை சீனா முந்தி சென்று விட்டது.
இந்த வெடிபொருள் ஆர்.டி.எக்ஸ். அல்லது எச்.எம்.எக்ஸ். போன்றவற்றை விட 40 சதவீதம் அதிக ஆற்றல் வாய்ந்தது. 2-ம் உலக போரில் இருந்து அமெரிக்காவால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சி.எல்.-20-க்கு இணையான வெடிபொருளை 2011-ம் ஆண்டு சீனா பரிசோதனை செய்து பார்த்தது. அதன்பின்னர், அந்த வெடிபொருளை அதிக எண்ணிக்கையில் தயாரிக்க தொடங்கியது என ஆசிய டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கின்றது.
இதற்கு நேர் எதிராக, அமெரிக்காவில் டென்னஸ்ஸீ மாகாணத்தின் ஹோல்ஸ்டன் நகரில் மட்டுமே அமெரிக்க ராணுவ தளத்தில் அனைத்து அமெரிக்க ராணுவ வெடிபொருட்களின் உற்பத்தியும் நடந்து வருகிறது. 2-ம் உலக போரில் இருந்து வெடிபொருட்கள் உற்பத்தி செய்வது மற்றும் பல்வேறு விகிதத்தில் கலப்பது உள்ளிட்ட பணிகள் அமெரிக்காவில் ஒரே இடத்தில் மட்டுமே நடந்து வருகிறது. அதுவும் நவீன வெடிபொருட்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே உற்பத்தி செய்ய கூடிய நிலை உள்ளது என தெரிவிக்கின்றது.
இதன்படி, இருப்பில் உள்ள ரசாயனங்களை கொண்டு ஆண்டுக்கு 10 டன்கள் சி.எல்.-20 வெடிபொருட்களையே அமெரிக்கா உற்பத்தி செய்ய முடியும்.
ஆனால், பரவலாக உபயோகிக்கும் இவற்றை ஆண்டுக்கு ஆயிரம் டன்கள் உற்பத்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது. இவற்றை அதிகரிக்க அமெரிக்க நிறுவனங்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.
அமெரிக்கா, தனது ராணுவ வெடிபொருட்கள் மற்றும் பிற உபகரணங்களுக்கு தேவையான அரை டஜன் ரசாயன பொருட்களை பெற சீனாவை சார்ந்தே உள்ளது. மற்றொரு டஜன் பொருட்களை பெற பிற நாடுகளிடம் இருந்து பெற வேண்டி உள்ளது.
இதனால், அமெரிக்காவின் ஆற்றல்மிக்க தளவாடங்கள் பற்றிய பாதுகாப்பில் கேள்வி எழுகிறது.
இதுதவிர, சீனா தெர்மோபேரிக் ஆயுதங்களின் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது. அவை பிற வெடிபொருட்களை விட அளவில் பெரிய மற்றும் வலிமையானவை.
சீனாவிடம் நீண்ட தொலைவுக்கு செல்ல கூடிய வகையில், வெடிபொருட்களை சுமந்து செல்ல கூடிய விமானங்கள் மற்றும் கப்பல்கள் உள்ளன. இந்த வகை ஆயுதங்கள் சிறிய மற்றும் எடை குறைவான ஆனால், அதிக தாக்கும் திறன் கொண்டவையாக உள்ளன.
அதனால், சீனாவுடனான மோதல் அமெரிக்காவுக்கு நஷ்டமே ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
2-ம் உலக போர் மற்றும் பனிப்போரில் ஆயுத உற்பத்தியில் அமெரிக்கா முன்னணியில் இருந்தது. ஆனால், ஆயுத உற்பத்தி திறன் இழந்த நிலையில் அமெரிக்காவால் தற்போது, ரஷியா மற்றும் சீனாவுக்கு எதிராக போரிட தைவான் மற்றும் உக்ரைனுக்கு நேரடியாக போதிய ஆயுதங்களை வழங்க முடியாமல் போய் விட்டது என ஆசிய டைம்ஸ் தெரிவித்து உள்ளது.
தைவானை பாதுகாக்க அமெரிக்கா இறங்கினால் ஒரு வாரத்தில் நீண்ட தூரம் தாக்கும் மற்றும் பிற ஆயுதங்களை அமெரிக்கா இழந்து நிற்கும். கையிருப்பை விட கூடுதலான ஆயுதங்களை அமெரிக்கா செலவிட வேண்டி வரும்.
ஆனால் சீனாவோ, வெடிபொருட்கள் மற்றும் நவீன ஆயுதங்களுக்கு முதலீடு செய்து, அமெரிக்காவை விட 5 முதல் 6 மடங்கு விரைவான விகிதத்தில் உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளது என செயல்திட்ட மற்றும் சர்வதேச ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், சீனாவுடன் மோதுவது அமெரிக்காவுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என நிறைவாக தெரிய வருகிறது.