இலங்கை சிறையில் இருந்து 43 பாகிஸ்தான் கைதிகளை தாயகம் அனுப்ப முடிவு
|இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 43 பாகிஸ்தான் கைதிகளை அவர்களின் தாய்நாட்டிற்கு அனுப்ப இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
கொழும்பு,
பாகிஸ்தானின் உள்துறை மந்திரி மொஹ்சின் நக்வி மற்றும் இலங்கை உயர் ஆணையர் அட்மிரல் (ஓய்வு) ரவீந்திர சந்திர ஸ்ரீவிஜய் குணரத்னா ஆகியோரிடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தங்கள் நாடுகளில் உள்ள சிறைகளில் வாடும் இரு நாட்டு கைதிகளை நாடு கடத்துவது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும் இந்த சந்திப்பின்போது பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 43 பாகிஸ்தான் கைதிகளை அவர்களின் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக இலங்கையில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை அழைத்து வருவது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கடந்த ஒரு மாதமாக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி மொஹ்சின் நக்வி கூறுகையில், பாகிஸ்தான் கைதிகள் நாடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இன்னும் சில தினங்களில் நிறைவடையும் என்றும், இந்த நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளித்த இலங்கை உயர் ஆணையருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு 70 ஆண்டுகளுக்கும் மேலாக வலுப்பெற்றுள்ளது என்று மொஹ்சின் நக்வி தெரிவித்தார்.