< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
புளோரிடாவை தாக்கிய இயான் புயல்: பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு..!!
|3 Oct 2022 11:09 PM IST
இயான் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை மறுநாள் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாகக்கருதப்படுகிற 'இயான்' புயல், அந்த நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது. மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. புளோரிடாவை சூறையாடி சென்ற இயான் சூறாவளி புயல், தெற்கு கரோலினா கடற்கரையில் கரையை கடந்தது.
தீவிர வலுவுடன் தாக்கிய இந்த புயலால் நீரில் மூழ்கிய பகுதிகளில் இன்னும் உயிர் பிழைத்தவர்களை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவை தாக்கிய இயான் புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இயான் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை மறுநாள் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.