சிரியாவில் வான்வழி தாக்குதல்; 15 பேர் பலி
|இந்த தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் மற்றும் 13 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
டமாஸ்கஸ்,
மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான ஈராக், சிரியாவில் ஈரானிய ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. எனவே அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. எனவே அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது அவர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு பதிலடியாக அமெரிக்க ராணுவமும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்நிலையில், சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள டிர் எஸ் சோர் நகரில் நேற்று இரவு வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் சிரியாவில் செயல்பட்டுவரும் ஈரான் புரட்சிப்படையின் முக்கிய தளபதி, அவரது 2 பாதுகாவலர்கள், 9 ஈராக் கிளர்ச்சியாளர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 19 ராணுவ வீரர்கள், 13 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக சிரிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ள நிலையில் சிரியாவின் குற்றச்சாட்டிற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.