ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,000 ஆக உயர்வு
|ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு இதுவரை 2,000 பேர் பலியாகி உள்ளனர்.
காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ரிக்டரில் 4.3 மற்றும் 6.3-க்கு இடைப்பட்ட அளவுகளில் தொடர்ச்சியாக 8 முறை நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன.
தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நகரின் பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்துள்ளன. உயர்ந்த கட்டிடங்களில் இருந்து பலர் அலறியடித்தபடி வெளியேறி, தெருவில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் நேற்று வரை 320-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர். மேலும் 1,000- க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஜிந்தா ஜன் மற்றும் கோரியான் மாவட்டங்களில் 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜிந்தா ஜன் மாவட்டத்தின் 3 கிராமங்களில் மட்டும் 15 பேர் இறந்துள்ளனர். 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பரா மற்றும் பத்கிஸ் பகுதிகளில் சில வீடுகள் முற்றிலும் அழிந்து விட்டன. நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியின் போது சடலங்களாக வந்து கொண்டிருக்கின்றன். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரித்து உள்ளதாக தலீபான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1,000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதுபற்றி ஹெராத் மாகாண பேரிடர் நிவாரண அதிகாரி மூசா ஆஷாரி கூறும்போது,
நிலநடுக்கத்திற்கு இதுவரை பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 1,000-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜெண்டா ஜன் நகரில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 12 ஆம்புலன்சுகளை உலக சுகாதார அமைப்பு அனுப்பியுள்ளது.