இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: காசாவில் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
|காசாவில் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது இஸ்ரேல்.
காசா,
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 13-வது வாரமாக தொடர்கிறது. இந்த போரால் காசாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. எனவே மனிதாபிமான அடிப்படையில் அங்கு போரை நிறுத்த வேண்டுமென சர்வதேச சமூகம் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. ஆனால் இஸ்ரேல் அதற்கு செவி சாய்க்க மறுக்கிறது. மாறாக ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிக்கும் தன்னுடைய இலக்கை அடைய காசாவில் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது இஸ்ரேல். இதனால் காசாவில் இடைவிடாமல் குண்டு சத்தம் கேட்ட வண்ணம் உள்ளது. குண்டு வீச்சில் அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகி வருகின்றன. இதனால் காசாவில் உயிரிழப்புகள் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை காசாவில் 22 ஆயிரத்து 438 பலியாகி உள்ளதாகவும், 57 ஆயிரத்து 614 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.