< Back
உலக செய்திகள்
தாவூத் இப்ராகிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதி- விஷம் கொடுக்கப்பட்டதாக பரவும் தகவல்
உலக செய்திகள்

தாவூத் இப்ராகிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதி- விஷம் கொடுக்கப்பட்டதாக பரவும் தகவல்

தினத்தந்தி
|
18 Dec 2023 11:33 AM IST

தாவூத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த கூடுதல் தகவல்களை அவரது உறவினர்களிடம் இருந்து பெறும் முயற்சியில் மும்பை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கராச்சி:

இந்தியாவால் தேடப்படும் நபரும், 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவருமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாவூத் இப்ராகிம் இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தளத்தில் வேறு எந்த நோயாளியும் அனுமதிக்கப்படவில்லை என்றும், மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் தாவூத்தின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அந்த தளத்திற்கு செல்ல முடியும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த கூடுதல் தகவல்களை அவரது உறவினர்களான அலிஷா பார்கர் மற்றும் சஜித் வாக்லே ஆகியோரிடம் இருந்து பெறும் முயற்சியில் மும்பை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, தாவூத் இப்ராகிமுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

தாவூத் இப்ராகிம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு கராச்சியில் தங்கியிருப்பதாக அவரது சகோதரி மகன் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.

தாவூத் இப்ராகிமுக்கு எதிராக என்ஐஏ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தை அவரும் அவரது ஆதரவாளர்களும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்