இலங்கையில் மாண்டஸ் புயல் எதிரொலி: பள்ளி கூடங்கள் மூடப்பட்டன; மக்களுக்கு எச்சரிக்கை
|இலங்கையில் மாண்டஸ் புயல் எதிரொலியாக பள்ளி கூடங்கள் மூடப்பட்டதுடன், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
கொழும்பு,
வங்க கடலில் கடந்த 5-ந்தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், நேற்று முன்தினம் அதிகாலையில் புயலாகவும் வலுவடைந்தது. இதற்கு 'மாண்டஸ்' என பெயரிடப்பட்டது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில் முதல் புயல் இதுவாகும்.
நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்ற நிலையில், இரவில் தீவிர புயலாகவும் மாறி மிரட்டியது. தொடர்ந்து வங்க கடல் பகுதியில் நேற்று காலை வரை நிலைக்கொண்டு இருந்தது.
நேற்று காலை தீவிர புயல், மீண்டும் புயலாக வலுவிழந்து தமிழக வட கடலோர பகுதியை நோக்கி வந்தது. புயல் கரையை கடந்த நிலையில் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இலங்கையில் மாண்டஸ் புயல் எதிரொலியாக, கொழும்பு மற்றும் பல நகரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து, தீவிர காற்று மாசுபாடு ஏற்பட்டு உள்ளது.
இதனால், இலங்கையில் உள்ள பள்ளி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் வீட்டிலேயே இருக்கும்படியும், வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
புயலை முன்னிட்டு இலங்கையின் அனுராதபுரம், திரிகோணமலை, பொலன்னருவை, புட்டலம் மற்றும் மகா இல்லுபள்ளம்மா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, சபராகமுவா மாகாணம் மற்றும் கல்லே, மதாரா, அனுராதபுரம் மற்றும் திரிகோணமலை மாவட்டங்களிலும், வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மற்றும் நுவாரா-எலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புயல் மற்றும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்திலும் நேற்று 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.
இந்நிலையில், மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில், மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடந்தது.
புயல் கரையை கடந்த நிலையிலும், தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் காஞ்சீபுரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.