< Back
உலக செய்திகள்
சித்ரங் சூறாவளி:  பலி 9 ஆக உயர்வு; 4 இந்திய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை
உலக செய்திகள்

சித்ரங் சூறாவளி: பலி 9 ஆக உயர்வு; 4 இந்திய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தினத்தந்தி
|
25 Oct 2022 11:05 AM IST

சித்ரங் சூறாவளி புயலுக்கு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவின் அசாம் உள்பட 4 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



டாக்கா,


வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த சித்ரங் சூறாவளி புயலின் முன்பகுதி நேற்று மாலை, சிட்டகாங் மற்றும் பரிசால் கடற்கரை பகுதியில் கரையை அடைந்தது. இதனை தொடர்ந்து, புயல் கரையை தொட்டதும் வலுவிழந்தது.

இதன்பின்னர், சிட்டகாங் மற்றும் பரிசால் கடற்கரை பகுதியில் நேற்றிரவு 9.30 மணி முதல் 11.30 மணிக்குள் சூறாவளி புயல் முழுமையாக கரையை கடந்து உள்ளது. சூறாவளி புயலால் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதன் வேகம் மணிக்கு 100 கி.மீ. வரை அதிகரித்து காணப்பட்டது என அந்நாட்டு வானிலை ஆய்வு மைய தலைவர் அபுல் கலாம் மாலிக் கூறியுள்ளார்.

புயலால் கனமழை பெய்யும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் புயல் கரையை கடந்த நிலையில், அதனை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

இந்த புயல் அந்நாட்டின் தெற்கு பகுதியில் விரைவாக நகர்ந்து செல்கிறது. இதனால், வங்காள விரிகுடாவில் இருந்து நூற்றுக்கணக்கான கி.மீ. தொலைவில் உள்ள டாக்கா நகரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன.

அந்த பகுதியிலுள்ள சாலைகள் கனமழையால் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. வங்காளதேசத்தில் கரையை கடந்த சித்ரங் சூறாவளி புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது.

இவர்களில், கமில்லா நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தின் 3 பேர், போலா நகரை சேர்ந்த 2 பேர் மற்றும் நரைல், ஷரியத்பூர், பர்குனா மற்றும் டாக்கா நகரங்களை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அவர்களில் பலர், மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்ததில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

புயலில் இருந்து கடலோர பகுதி மக்களை பாதுகாக்க 15 கடலோர மாவட்டங்களில் 7,030 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுவரை 2 லட்சம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்தியாவின் அசாம் உள்பட 4 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வங்காளதேச எல்லை மற்றும் இந்தியாவின் அசாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியே இன்று காலை 6 மணிக்கு பின் சூறாவளியானது கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், எச்சரிக்கை அறிவிப்பு வெளிவந்து உள்ளது.

திரிபுராவில் புயலால், இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதேபோன்று, முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. கடல் பகுதிகளுக்கு மக்கள் தேவையின்றி செல்ல வேண்டாம் என்று அவர் வேண்டுகோளும் விடுத்து உள்ளார்.

மேலும் செய்திகள்