இஸ்ரேலுக்கு எதிராக... அடுத்த 3 நாட்களுக்கு இணையதள தாக்குதல் எச்சரிக்கை
|இஸ்ரேலில், இணையதள சேவைகள் பாதிக்கப்பட கூடும். பொய்யான செய்திகள் பரவ கூடும் என அந்நாட்டின் தேசிய இணையதள இயக்குநரகம் எச்சரித்து உள்ளது.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடுமையான தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியில் இசை கச்சேரி நடந்தபோது, உள்ளே புகுந்த பயங்கரவாதிகள், இளம்பெண்கள், ஆண்கள் என பலரையும் தாக்கினர். இதில், அந்த நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
ஏறக்குறைய 6 மாதங்களாக நடந்து வரும் மோதலில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். காசாவுக்கு எதிரான போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள சூழலில், இஸ்ரேல் நாட்டின் அமைப்புகள் மற்றும் மக்களுக்கு எதிராக இணையதள தாக்குதல்கள் நடத்தப்பட கூடும் என இஸ்ரேல் அரசு இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, ஈரானின் ஜெருசலேம் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், #OpJerusalem என்ற ஹேஷ்டேக்கின் கீழ் அச்சுறுத்தலை ஏற்படுத்த ஈரான் திட்டமிட்டு உள்ளது. இதேபோன்று, வருகிற 7-ந்தேதி #OpIsrael என்ற ஹேஷ்டேக் பெயரிலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இஸ்ரேல் அரசுக்கு எதிராக, இந்த நாட்களில் சைபர் தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் இருந்து மக்களுக்கு ஈரான் அழைப்பு விடும். ஒவ்வோர் ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் ஈரானின் ஜெருசலேம் தினம் கொண்டாடப்படும்.
அன்றைய நாளில், இணையதளத்தில் இஸ்ரேலுக்கு எதிராக பாதிப்பை ஏற்படுத்த கூடிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். இதன்படி, வலைதளங்கள் ஹேக்கிங் செய்யப்படுதல், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள், இ-மெயில்கள் வழியே போலியான செய்திகளை பரப்புதல், இதன் அடிப்படையில் தனிநபர்களின் கணினிகளில் வைரஸ் பதிவிறக்கம், தாக்குதல் ஏற்படுத்துவது, வங்கி விவரங்களை திருடுதல் அல்லது பிற தனிப்பட்ட தகவல்களை திருடுவது போன்ற திட்டமிட்ட தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும்.
சமூக நெட்வொர்க் இணைப்புகளை ஹேக்கிங் செய்தல், நிறுவனங்களின் தகவல்களில் ஊடுருவுதல், தகவல்களை கசிய விடுதல், தாக்குதல்களை ஊக்குவிக்கும் வகையிலான செய்திகளை பரப்பி, பகிர்தல் போன்ற தேவையற்ற செயல்களும் ஒவ்வோர் ஆண்டும் இந்த காலகட்டத்தில் நடைபெறும்.
இதனை முன்னிட்டு இஸ்ரேல் மக்கள் எச்சரிக்கையுடள் இருக்கும்படி, அந்நாட்டின் தேசிய இணையதள இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில், இஸ்ரேல் அமைப்புகள் மட்டுமின்றி, தனிநபர் மற்றும் பொதுமக்கள் என பலரின் வலைதளங்கள், நெட்வொர்க்குகள் இலக்குகளாக கொள்ளப்படும்.
இதனால், இணையதள சேவைகள் பாதிக்கப்பட கூடும். பொய்யான செய்திகள் பரவ கூடும் என இயக்குநரகம் எச்சரித்து உள்ளது. கடந்த ஆண்டுகளிலும் இந்த காலகட்டத்தில், இதுபோன்ற தாக்குதல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.