< Back
உலக செய்திகள்
இன்புளூயன்சா பாதிப்புக்கு ஊரடங்கா...? கொதித்தெழுந்த சீன நகரவாசிகள்
உலக செய்திகள்

இன்புளூயன்சா பாதிப்புக்கு ஊரடங்கா...? கொதித்தெழுந்த சீன நகரவாசிகள்

தினத்தந்தி
|
11 March 2023 4:42 PM GMT

சீனாவில் இன்புளூயன்சா பாதிப்புக்கு ஊரடங்கு விதிப்பது பற்றி பரிசீலனை செய்வோம் என கூறிய நகர நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்தனர்.



பீஜிங்,


சீனாவின் ஷான்க்சி மாகாணத்தில் ஜியான் என்ற பிரபல சுற்றுலா நகரம் அமைந்து உள்ளது. அந்நகரத்தில் தீவிர இன்புளூயன்சா பாதிப்பு ஏற்பட்டு விட்டால், ஊரடங்கு விதிப்பது பற்றி பரிசீலனை செய்வோம் என நகர நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ஊரடங்கு அமலானால் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்பட பல நெருக்கடியான இடங்களை மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும். இதனால், நகர நிர்வாகத்தின் இந்த தகவலுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து விட்டனர்.

இதுபற்றி அந்நாட்டின் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் ஒன்றான வெய்போவில் வெளியான செய்தியில், இதுபோன்ற சந்தர்ப்பத்தில் அச்சம் பரப்புவதற்கு பதிலாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது சிறந்த ஒன்றாக இருக்கும் என பயனாளர் ஒருவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவலின்போது, ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இதுபோன்று கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டு, அது மக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. அதனை பிரதிபலிக்கும் வகையில் ஜியான் நகர நிர்வாக அறிவிப்பு உள்ளது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கொரோனாவுக்கான கட்டுப்பாடுகள் கடந்த ஜனவரியில் நீக்கப்பட்டன. எனினும், இன்புளூயன்சா பாதிப்புகளால் மீண்டும் ஊரடங்கு விதிப்பது வர்த்தக நடவடிக்கைகளை பாதிக்கும் என மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது.

1.3 கோடி மக்கள் கொண்ட அந்நகரில், வருங்காலத்தில் புளூ பாதிப்பு பரவினால் 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்க முடிவானது. இதனால், கொரோனா ஊரடங்கை போன்று வார கணக்கில் வீடுகளில் முடங்கி கிடக்க கூடிய சூழல் ஏற்படும் என மக்களிடையே அச்சம் காணப்படுகிறது.

உணவு, மருந்து உள்பட பிற தேவைகளுக்கான வசதிகள் இன்றி பாதிக்கப்பட்ட நிலை மீண்டும் திரும்பி விட கூடாது என்பதற்காக அவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால், ஊரடங்கு திட்டம் கைவிடப்படும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்