சிங்கத்திடம் சீண்டி விளையாடிய பூங்கா பணியாளருக்கு நேர்ந்த கொடுமை
|ஜமைக்காவில் விலங்கியல் பூங்காவில் பார்வையாளர்களை கவர சிங்கத்திடம் சீண்டி விளையாடிய பணியாளரின் கை விரல் துண்டானது.
செயின்ட் எலிசபெத்,
ஜமைக்கா நாட்டில் சந்தாகுரூசுக்கு மேற்கே விலங்கியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்கா, வரி குதிரைகள், குரங்குகள், சிங்கங்கள், முதலைகள் மற்றும் பறவைகளை வாழ்விடங்களாக கொண்டுள்ளன.
இவற்றை கண்டுகளிக்க சுற்றுலாவாசிகளும் அதிக அளவில் வருவது வழக்கம். இதேபோன்று, கூண்டு ஒன்றில் சிங்கங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. அதனை பார்வையிட சுற்றுலாவாசிகள் சிலர் அந்த பகுதிக்கு வந்துள்ளனர். பூங்கா பணியாளர் ஒருவர், பார்வையாளர்களை கவருவதற்காக சிங்கத்திடம் சீண்டி விளையாடி உள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சிங்கம் அந்த நபரின் வலது கையை வாயில் கவ்வி விட்டது. இதனால், மிரண்டு போன பணியாளர் கையை பின்னால் இழுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், சிங்கத்தின் வாயில் சென்ற கையை அவரால் வெளியே இழுக்க முடியவில்லை.
இதில், அவரது வலது மோதிர விரல் ஒரு பகுதியை சிங்கம் கடித்து விட்டது. இதனை பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இதுபற்றி பெயர் வெளியிட விருப்பமில்லாத பெண் ஒருவர் கூறும்போது, முதலில் சம்பவம் நடந்தபோது அது வேடிக்கையான நிகழ்வு என நினைத்தேன். பார்வையாளர்களை கவர இதுபோன்று செய்வது அவர்களது வேலை என எண்ணி கொண்டேன்.
அந்த பணியாளர் தரையில் விழுந்த பின்பே நிலைமையின் தீவிரம் புரிந்தது. ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைந்து விட்டோம் என கூறியுள்ளார்.
அந்த பணியாளரின் விரலின் ஒரு பகுதி போய்விட்டது. நான் ஓடி விட்டேன். சிறிது நேரம் கழித்து, காயமடைந்த பூங்கா பணியாளர் எழுந்து, வாகனம் ஒன்றை நோக்கி நடந்து சென்றார். அவர் நடந்தபோது, வலி ஏற்பட்டதற்கான எந்த சுவடும் அவரது முகத்தில் தென்படவில்லை என்றும் அந்த பெண் கூறியுள்ளார்.
இதுபற்றி ஜமைக்கா விலங்குகளுக்கான கொடுமை தடுப்பு அமைப்பின் மேலாண் இயக்குனர் பமீலா லாசன் கூறும்போது, நாங்கள் பூங்காவுக்கு சென்று, சம்பவம் பற்றி அறிந்து விசாரணை மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.