< Back
உலக செய்திகள்
கன்னத்தில் முத்தமிட முயன்ற குரோஷிய மந்திரி: சங்கடத்திற்குள்ளான ஜெர்மனி பெண் மந்திரி
உலக செய்திகள்

கன்னத்தில் முத்தமிட முயன்ற குரோஷிய மந்திரி: சங்கடத்திற்குள்ளான ஜெர்மனி பெண் மந்திரி

தினத்தந்தி
|
5 Nov 2023 1:09 PM IST

ராட்மேன், அன்னாலினாவை கன்னத்தில் முத்தமிட முற்பட்டார். அன்னாலினா மென்மையாக ராட்மேனின் இந்த செய்கையை தவிர்த்தார்.

பெர்லின்,

ஜெர்மனியின் தலைநகரமான பெர்லின் நகரில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு துறை மந்திரிகளுக்கான சந்திப்பு நடைபெற்றது. அந்த சந்திப்பில் பல ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு துறை மந்திரிகள் கலந்து கொண்டனர். 65 வயதான குரோஷியா நாட்டை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரி கோர்டன் க்ரிலிக்-ராட்மேன் இச்சந்திப்பில் பங்கு பெற்றார்.

அப்போது அனைத்து மந்திரிகளும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்து கொள்ளும் சம்பிரதாய நிகழ்வு நடைபெற்றது. ஜெர்மனியின் வெளியுறவு துறை மந்திரி அன்னாலினா பேர்பாக் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு அனைவருடன் குழுவில் நின்றார். அப்போது எதிர்பாராத விதமாக அன்னாலினா அருகில் நின்று கொண்டிருந்த ராட்மேன், அன்னாலினாவை கன்னத்தில் முத்தமிட முற்பட்டார். அன்னாலினா மென்மையாக ராட்மேனின் இந்த செய்கையை தவிர்த்தார். பலரையும் இந்த செயல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பாக பேசப்பட்டது.

குரோஷியா நாட்டின் பெண்கள் உரிமை ஆர்வலர் ராடா போரிக், "நெருக்கங்களை அனுமதிக்கும் உறவுகளுக்கு இடையேதான் இது போன்ற செய்கைகளை வெளிப்படுத்த வேண்டும். இந்த இருவருக்கும் இது போன்ற உறவு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய அநாகரீகமான செயல்" என விமர்சித்துள்ளார்.

முன்னாள் குரோஷியா நாட்டு பிரதமர் ஜட்ரன்கா கோஸோர், வலுக்கட்டாயமாக பெண்களை முத்தமிடுவதும் வன்முறைதானே? என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ராட்மேனை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், இது குறித்து ராட்மேன் கருத்து தெரிவிக்கும் போது,இதில் என்ன பிரச்சினை என எனக்கு தெரியவில்லை. ஒரு சக பணியாளரை சந்தித்த மகிழ்ச்சியை மனிதாபமான அணுகுமுறையில் வெளிப்படுத்தினேன். இந்த சந்திப்பின் போது இவ்வாறு நடந்து கொண்டது பொருத்தமற்ற தருணமாக சிலருக்கு தோன்றலாம். அவ்வாறு நினைப்பவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்