இங்கிலாந்து பிரதமர் டிரஸ்சுக்கு நெருக்கடி; சுவெல்லாவை தொடர்ந்து அடுத்தடுத்து பதவி விலகல்
|இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் இந்திய வம்சாவளி பெண் மந்திரியை தொடர்ந்து, முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ளனர்.
லண்டன்,
இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்று கொண்ட லிஸ் டிரஸ் அமைச்சரவையில், இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் (வயது 42) உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஒரு தவறு செய்து விட்டேன். அரசு விதிகளை மீறி விட்டேன் என கூறி அவர் மந்திரி பதவியில் இருந்து நேற்றிரவு விலகினார். இதுபற்றிய தனது பதவி விலகல் கடிதம் ஒன்றை லிஸ் டிரஸ்சுக்கு அனுப்பினார்.
எனினும், பிரதமர் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டேன் என அவர் கூறியுள்ளார். கடந்த 14-ந்தேதி நிதி மந்திரி பதவியில் இருந்து குவாசி வார்தெங் நீக்கப்பட்டு, ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.
ஒரு வாரத்திற்குள் டிரஸ்சின் அமைச்சரவையில் 2-வது மந்திரி பதவியில் இருந்து விலகி சென்றுள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் சூழலில் அமைச்சரவையில் இருந்து பெண் மந்திரி வெளியேறி உள்ளார்.
இந்த சூழலில், இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் இந்திய வம்சாவளி பெண் மந்திரி பிரேவர்மென்னை தொடர்ந்து, முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ளனர்.
அரசில் தலைமை பதவி வகிக்கும் வெண்டி மோர்ட்டன் மற்றும் துணை கொறடாவான கிரெய்க் விட்டேக்கர் ஆகியோர் பதவி விலகி உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இருவரும் பதவியில் நீடிக்கின்றனர் என்று மற்றொரு தகவலும் கூறப்படுகிறது. 2015-ம் ஆண்டில் இருந்து வெஸ்ட் மிட்லேண்டில் உள்ள ஆல்ட்ரிட்ஜ்-பிரவுன்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த எம்.பி.யான மோர்ட்டன், கடந்த 6 வாரங்களுக்கு முன்னரே அந்த பதவிக்கு டிரஸ்சால் நியமிக்கப்பட்டார்.
கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என் நிர்பந்திக்கப்பட்டு, அச்சுறுத்தலுக்கு ஆளானார்கள் என்றும் ஒரு கட்டத்தில் கடுமையாக நடத்தப்பட்டு உள்ளனர் என்றும் அரசியல்வாதிகளால் கூறப்படுகிறது.