சுனிதா வில்லியம்ஸ் 2025-ல்தான் பூமிக்கு திரும்புவாரா? நாசா கூறுவது என்ன?
|சுனிதா வில்லியம்ஸ் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் உள்ளார்.
நியூயார்க்,
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58), மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் (61) ஆகியோர் கடந்த மாதம் 5-ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் திட்டமிட்டபடி 22-ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயுக்கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்தனர்.
இந்த பிரச்சினையால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளார். அவர்களை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலன் உதவியுடன் அவர்களை அழைத்துவர உள்ளனர். 4 வீரர்கள் குழுவுடன் விண்வெளிக்குச் செல்லும் இந்த டிராகன் விண்கலன் அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் பூமிக்கு திரும்பும் என்று கூறப்படுகிறது. இதற்கான திட்ட பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும், கிறிஸ்துமஸ் (2024) மற்றும் புத்தாண்டைக்கூட (2025) விண்வெளியில் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் சென்றவர்கள் 8 மாதம் கழித்தே பூமி திரும்புவதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தயார் செய்துவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
நாங்கள் இங்கிருக்கும் குழுவினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். நிறைய பணிகள் உள்ளன என்று சுனிதா வில்லியம்ஸ் சமீபத்திய காணொளி சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் வீட்டிற்குத் திரும்பி வரவேண்டும் என்ற உணர்வு உள்ளது. அதே நேரத்தில், இங்கு இவ்வாறு சுற்றி மிதப்பது நன்றாக இருக்கிறது.
விண்வெளியில் இருப்பது மற்றும் இங்கிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் திட்டமிடப்பட்ட நேரத்தைவிட அதிக நேரத்தை விண்வெளியில் இருப்பவர்கள் என்றாலும்கூட, இதற்கு முன்பும் சில விண்வெளி வீரர்கள் விண்வெளியில் அதிக நாட்களைச் செலவிட்டுள்ளனர்.
கடந்த 1990களின் மத்தியில், ரஷியாவின் வலேரி பாலியாகோவ் மிர் விண்வெளி நிலையத்தில் 437 நாட்கள் தங்கியிருந்தார். பிராங்க் ரூபியோ என்ற அமெரிக்க விண்வெளி வீரர் 371 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு பூமிக்குத் திரும்பினார். இதுவே அதிகபட்சமாக ஒரு அமெரிக்கர் விண்வெளியில் இருந்த காலமாகும்.