இங்கிலாந்து மன்னர் முடிசூட்டு விழா: இந்திய வம்சாவளி பெண் சமையல் கலைஞர் பங்கேற்பு
|இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் கலைஞரான மஞ்சு மல்ஹி இங்கிலாந்து மன்னர் முடிசூட்டு விழாவில் பங்கேற்கிறார்.
லண்டன்,
இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடிசூடும் விழாவில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் லண்டனில் முகாமிட்டுள்ளனர். இந்த விழாவைக் காண ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வரும் நிலையில், சார்லஸை அழைத்துச் செல்வதற்காக பாரம்பரியமிக்க சாரட் வண்டி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
இந்த விழாவிற்காக இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த 700 ஆண்டுகள் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயாராகியுள்ளது. புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் சார்லஸின் தலையில் அணிவிக்கப்பட்ட உடன், அவரது மனைவி கமிலா இங்கிலாந்து ராணியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.
இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் முடிசூட்டு விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உலக நாடுகளின் தலைவர்கள், இங்கிலாந்திலுள்ள தொண்டு நிறுவனங்கள், சமூக குழுக்களைச் சேர்ந்தவர்கள் என சுமார் 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி `பிரிட்டிஷ் பேரரசு பதக்கம்' பெற்ற 850 தன்னார்வலர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள். அவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் கலைஞரான மஞ்சு மல்ஹியும் ஒருவர். இவர் கொரோனா காலத்தில் சிறப்பான சேவையாற்றியதற்காகப் ராணி 2-ம் எலிசபெத்திடமிருந்து பிரிட்டிஷ் பேரரசு பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.