< Back
உலக செய்திகள்
கொரோனா பரவல்; பீஜிங்கில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்
உலக செய்திகள்

கொரோனா பரவல்; பீஜிங்கில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்

தினத்தந்தி
|
22 May 2022 11:52 AM IST

சீனாவில் கொரோனா பரவலை முன்னிட்டு பீஜிங் நகரில் இன்று மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

பீஜிங்,

சீனாவின் உகான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசை அந்நாடு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதித்து கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால், சமீப நாட்களாக சீனாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதுபற்றி சீனாவில் இருந்து வெளிவரும் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பீஜிங் நகரின் ஹைதியான் மாவட்டத்தில் அதிகாரிகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.

அதனுடன், சாவோயாங், பெங்தை, சன்யி மற்றும் பங்ஷான் ஆகிய மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என அரசின் நகர செய்தி தொடர்பாளர் சூ வெளியிட்ட அறிக்கையை சுட்டி காட்டியுள்ளது.

இதன்படி, இன்றில் இருந்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அனைத்து இடங்களும், உடற்பயிற்சி கூடங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் வணிக வளாகங்களும் மூடப்படுகின்றன.

பீஜிங்கில் இயற்கையாக அமைந்த அனைத்து மேம்படுத்தப்பட்ட சுற்றுலா பகுதிகளுக்கும் மக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. எனினும், பூங்காக்களில் 30 சதவீதம் பேர் செல்ல அனுமதி அளிக்கப்படும்.

பீஜிங்கின் 5 மாவட்ட குடியிருப்புவாசிகள் அனைவரும் வருகிற 28ந்தேதி வரை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி கேட்டு கொள்ளப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிக தொற்றும் தன்மை கொண்ட, லேசான அறிகுறிகளுடன் கூடிய ஒமைக்ரான் பரவலால் கொரோனாவானது சிக்கலான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது என சூ கூறியுள்ளார்.

பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை புறக்கணித்ததும் கொரோனா பரவலுக்கு பெரும் பங்காற்றி உள்ளது. அதனால், தொற்று பரவலுக்கான ஆபத்தும் அதிகரித்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்