கொரோனா பெருந்தொற்று; அமெரிக்காவில் தேசிய அவசரகால நிலையை முடிவுக்கு கொண்டு வரும் மசோதாவுக்கு அரசு ஒப்புதல்
|கொரோனா பெருந்தொற்றுக்கான தேசிய அவசரகால நிலையை முடிவுக்கு கொண்டு வரும் மசோதாவில் அமெரிக்க அதிபர் பைடன் கையெழுத்திட்டு உள்ளார்.
வாஷிங்டன்,
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உலகுக்கு தெரிய வந்தது. இதன்பின்னர், பல்வேறு நாடுகளுக்கும் பெருந்தொற்றாக பரவி, பல அலைகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியது.
அவற்றில் அமெரிக்கா அதிக பாதிப்புகளை சந்தித்து தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. கோடிக்கணக்கானோர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தொற்றால் உயிரிழந்தும் உள்ளனர்.
மூன்றாண்டுகளாக நீடித்து வரும் இந்த பாதிப்புகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. அரசின் நிதி பெருமளவில், கொரோனா பரிசோதனை, மையங்கள் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு செலவிடப்பட்டது.
இந்த நிலையில், அதிபர் பைடன் தலைமையிலான அரசு, இந்த தேசிய மற்றும் பொது சுகாதார அவசரகால நிலையை வருகிற மே 11-ந்தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. அதற்கான அறிவிப்புகளை மே 11-ந்தேதியன்று வெளியிடவும் வெள்ளை மாளிகை திட்டமிட்டு உள்ளது.
அதனால், கொரோனா பெருந்தொற்றுக்கான தேசிய அளவிலான அவசரகால நிலையை முடிவுக்கு கொண்டு வரும் சட்ட மசோதா ஒன்றில் அதிபர் பைடன் கையெழுத்திட்டு உள்ளார் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.
அதற்கு முன், மக்கள் பிரதிநிதிகள் சபையில் 229-197 என்ற கணக்கில், ஜனநாயக கட்சியினரில் பலத்த ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. செனட் சபையிலும் கடந்த மாதம் 63-23 என்ற கணக்கில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.
அவையின் பாதிக்கும் மேற்பட்ட ஜனநாயக கட்சியினர் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், மூன்று ஆண்டுகளுக்கும் கூடுதலாக அமெரிக்காவில் உள்ள இந்த தேசிய அவசரநிலை முடிவுக்கு வரும்.