ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா; ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு
|டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்ரிட்,
ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது. இந்த நிலையில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர்.
அந்த வகையில் ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ், இந்தியாவிற்கு வருகை தர இருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பெட்ரோ சான்செஸ், "எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக என்னால் டெல்லிக்கு செல்ல முடியாது.
அதே சமயம் முதல் துணை அதிபர் நடியா கேல்வினோ, பொருளாதார விவகாரங்கள் துறை மந்திரி, வெளியுறவுத்துறை மந்திரி ஆகியோர் ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகளாக ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் கொரோனா தொற்று காரணமாக ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.