< Back
உலக செய்திகள்
உக்ரைனில் போரிட சம்மதம்: 12 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்ட ரஷிய முன்னாள் மேயர் விடுதலை
உலக செய்திகள்

உக்ரைனில் போரிட சம்மதம்: 12 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்ட ரஷிய முன்னாள் மேயர் விடுதலை

தினத்தந்தி
|
14 Jan 2024 7:46 PM IST

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷிய முன்னாள் மேயருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மாஸ்கோ,

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 690வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை, குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குற்றவாளிகள் பலரையும் உக்ரைனில் போரில் ரஷியா பயன்படுத்தி வருகிறது. ரஷிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் பலருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு உக்ரைனில் போரிட அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதனிடையே, லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ரஷிய முன்னாள் மேயர் உக்ரைனில் போரிட சம்மதம் தெரிவித்ததால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ரஷியாவின் வல்டிவஸ்டொக் நகர மேயராக 2018 முதல் 2021 வரை செயல்பட்டவர் ஒலெக் குமென்யங். இவர் 38 மில்லியன் ரூபெள் (இந்திய மதிப்பில் 3 கோடியே 58 லட்ச ரூபாய்) லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பிரிமார்ஸ்கை மாகாண சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறையில் இருந்த ஒலெக் குமென்யங் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். உக்ரைனில் போரிட சம்மதம் தெரிவித்ததையடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்போது ஒலெக் குமென்யங்க் ரஷிய படைகளுடன் இணைந்து உக்ரைனில் போரிட்டு வருகிறார்.

மேலும் செய்திகள்