< Back
உலக செய்திகள்
கொலம்பியா: ராணுவ தளம் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; 9 வீரர்கள் மரணம்
உலக செய்திகள்

கொலம்பியா: ராணுவ தளம் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; 9 வீரர்கள் மரணம்

தினத்தந்தி
|
30 March 2023 11:04 AM IST

கொலம்பியாவில் ராணுவ தளம் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 9 வீரர்கள் மரணம் அடைந்து உள்ளனர்.

பொகாட்டா,

கொலம்பியா நாட்டில் அரசுக்கு எதிராக தேசிய விடுதலை ராணுவ கொரில்லாக்கள் என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். நாட்டில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, அவர்களுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் அரசு ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கில் எல் கார்மன் என்ற ஊரக பகுதியில் அமைந்து உள்ள ராணுவ தளம் மீது இந்த கொரில்லா குழுக்கள் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் 9 வீரர்கள் மரணம் அடைந்து உள்ளனர். தவிரவும், 9 வீரர்கள் காயம் அடைந்தனர்.

இதனை கொலம்பியா ராணுவம் வெளியிட்ட செய்தி குறிப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இந்த வீரர்கள் நார்தே டி சான்டாண்டர் மாகாணத்தில் உள்ள எண்ணெய் ஆலையை பாதுகாக்கும் பணிக்காக ஈடுபட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து சம்பவ பகுதியில் நிலைமையை ஆய்வு செய்ய தேசிய ராணுவ தளபதி ஜெனரல் லூயிஸ் மொரீசியோ ஆஸ்பினா சென்றார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கொலம்பியா அதிபர் கஸ்டாவோ பெட்ரோ கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அமைதி மற்றும் பொதுமக்களிடம் இருந்து தேசிய விடுதலை ராணுவ கொரில்லாக்கள் முற்றிலும் அந்நியப்பட்டு உள்ளனர் என அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்