நியூசிலாந்து பிரதமராக பதவியேற்றார் கிறிஸ்டோபர் லக்சன்: அவரது முதல் முன்னுரிமை இதுதான்..!
|நியூசிலாந்தில் தேசிய கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், புதிய அரசின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.
வெலிங்டன்:
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டன் கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கொரோனா தொற்று நடவடிக்கை, ஊழல் குற்றச்சாட்டு போன்ற காரணங்களால் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்த நிலையில் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது ஆட்சிக்காலம் 9 மாதங்கள் கடந்தநிலையில் நாட்டின் 54-வது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் தொழிலாளர் கட்சி சார்பில் கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார். எதிர்க்கட்சியான தேசிய கட்சி சார்பில் அதன் தலைவர் கிறிஸ்டோபர் லக்சன் போட்டியிட்டார். இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை குறைவு என்பதால் கூட்டணி கட்சி எம்.பி.க்களை சார்ந்து களம் இறங்கினர்.
கடந்த மாதம் 14ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியை விட தேசிய கட்சி அதிக இடங்களை பெற்றது. அதன்பின்னர் 2 சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்டோபர் லக்சன் (வயது 53), நாட்டின் பிரதமராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ஜெனரல் கிண்டி கைரோ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் பேசிய பிரதமர் லக்சன், தான் ஏற்றிருக்கும் பிரதமர் பதவியானது, அருமையான பொறுப்பு என்றும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முதல் முன்னுரிமை கொடுக்க உள்ளதாகவும் கூறினார்.
"நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் புதிய ஆட்சியின் 100 நாள் செயல் திட்டத்தை விரைவில் தயார் செய்வது குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளேன்." என்றும் புதிய பிரதமர் லக்சன் கூறினார்.
கூட்டணி ஒப்பந்தத்தின்படி, 2 ஆண்டுகளுக்குள் வரி குறைப்புகள் மற்றும் 500 போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதாக லக்சன் உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை, குறிப்பாக சிகரெட்டில் குறைந்த அளவிலான நிகோடின், சில்லறை விற்பனை குறைப்பு மற்றும் இளைஞர்கள் புகைப்பிடிக்க வாழ்நாள் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ரத்து செய்ய புதிய அரசு திட்டமிட்டுள்ளது.