< Back
உலக செய்திகள்
ஹைதி நாட்டில் கிறிஸ்தவ மத பேரணி மீது துப்பாக்கி சூடு; 7 பேர் பலி
உலக செய்திகள்

ஹைதி நாட்டில் கிறிஸ்தவ மத பேரணி மீது துப்பாக்கி சூடு; 7 பேர் பலி

தினத்தந்தி
|
27 Aug 2023 9:34 AM IST

ஹைதி நாட்டில் கிறிஸ்தவ மத பேரணியின் மீது கிளர்ச்சி குழுக்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.

போர்ட்-ஆ-பிரின்ஸ்,

ஹைதி நாட்டில் பல கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டு மக்களில் பலர் சுய பாதுகாப்பு குழுக்களில் தங்களை இணைத்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவற்றில் வா காலே என்ற குழுவானது, பலரது நம்பிக்கையை பெற்றுள்ளது.

ஆனால், உள்நாட்டு மக்களுக்கு எதிராகவும் சில சமயங்களில் இந்த குழு தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால், வன்முறை தூண்டி விடப்படுவதுடன், மக்களிடையே அச்சம் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் கனான் என்ற புறநகர் பகுதியில் பாதிரியார் மார்க்கோ என்பவர் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதுபற்றிய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளிவந்துள்ளன.

அந்த மத குழுக்களுடன் தொடர்புடைய மஞ்சள் வண்ண சட்டைகளை அணிந்தபடி பலர் பேரணியாக சென்றனர். ஒரு சிலர் தங்களின் கைகளில் கம்புகள், ஆயுதங்கள் போன்றவற்றையும் ஏந்தியபடி சென்றனர்.

எனினும், திடீரென இயந்திர துப்பாக்கிகளுடன் பேரணிக்குள் புகுந்த கிளர்ச்சி குழுவானது அதிரடியாக அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்தனர். ஆனால், 10 பேர் உயிரிழந்து உள்ளனர் என உள்ளூர் ஊடக தகவல் தெரிவிக்கின்றது.

ஹைதியின் தலைநகர் போர்ட்-ஆ-பிரின்சின் வடக்கு புறநகர் பகுதியை இந்த குழுவினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.

இந்த குழுவின் இயக்குநரான கிதியோன் ஜீன் என்பவர் கூறும்போது, இந்த பலி எண்ணிக்கை உயர கூடும். பலர் காயமடைந்து உள்ளனர். கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்லும் பலர் கடத்தப்பட்டும் உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்