< Back
உலக செய்திகள்
#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் நகரில் காலரா பரவும் ஆபத்து..!!
உலக செய்திகள்

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் நகரில் காலரா பரவும் ஆபத்து..!!

தினத்தந்தி
|
11 Jun 2022 2:34 AM IST

பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காத நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் காலரா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.


Live Updates

  • “ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்” - ஜெலன்ஸ்கி
    11 Jun 2022 8:34 PM IST

    “ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்” - ஜெலன்ஸ்கி

    கீவ்,

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தொடங்கிய பிறகு 2-வது முறையாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் தற்போது உக்ரைனுக்கு சென்றுள்ளார். அங்கு தலைநகர் கீவ்வில் உள்ள அதிபர் மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அவர் சந்தித்து பேசினார்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது, ரஷியாவின் மீது மேலும் அதிக அளவிலான பொருளாதார தடைகளை ஐரோப்பிய ஆணையம் விதிக்க வேண்டும் என ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டார். மேலும் ஐரோப்பிய ஆணையத்தில் சேர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உக்ரைன் மேற்கொள்ளும் என ஜெலன்ஸ்கி கூறினார்.

    தொடர்ந்து பேசிய உர்சுலா, உக்ரைனில் ஏற்பட்டுள்ள சூழலுக்காக உலக நாடுகள் துக்கத்தை பகிர்ந்து கொள்வதாகவும், அதே சமயம் ரஷியாவின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை எதிர்த்து நிற்கும் உக்ரைனின் பலத்தை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். 

  • 11 Jun 2022 7:11 PM IST

    உக்ரைனின் கிழக்கு லுஹான்ஸ்க் மாகாணத்தில், சீவிரோடோனெட்ஸ்க் மற்றும் லைசிசான்ஸ்க் நகரங்களுக்கு தென்மேற்கே உள்ள வ்ரூபிவ்கா கிராமத்தில் ரஷியா ஃபிளமேத்ரோவர் ஆயுதத்தை பயன்படுத்தியதாக உக்ரேனிய கவர்னர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

    போர்க்களத்தில் ஃபிளமேத்ரோவர்களைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமானது என்றாலும், லுஹான்ஸ்க் மாகாணத்தின் கவர்னர் செர்ஹி ஹைடாய், ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பொதுமக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார். ஹைடாயின் கூற்றுகளின் உண்மை நிலையை உடனடியாகச் கண்டறிய முடியவில்லை.

    சீவிரோடோனெட்ஸ்க், லிசிசான்ஸ்க் ஆகியவை உக்ரேனிய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் லுஹான்ஸ்க் மாகாணத்தின் கடைசி பெரிய பகுதிகளாகும். ரயில்வே டிப்போக்கள், செங்கல் தொழிற்சாலை மற்றும் கண்ணாடி தொழிற்சாலை உள்ளிட்ட முக்கியமான தொழில்துறை பகுதிகளை ரஷிய படைகள் அழித்து வருவதாக ஹைடாய் கூறினார்.

  • மரியுபோல் நகரில் 24 குழந்தைகள் பலி- உக்ரைன் தகவல்
    11 Jun 2022 2:57 PM IST

    மரியுபோல் நகரில் 24 குழந்தைகள் பலி- உக்ரைன் தகவல்

    உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மரியுபோல் நகரில் 24 குழந்தைகள் பலியாகி இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “ ரஷியாவின் தாக்குதலை தடுக்க உக்ரைன் படைகள் அனைத்தையும் செய்து வருகிறது. உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் மிகக் கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகரில் வான் வழி தாக்குதலை தொடங்கியிருக்கிறோம்” எனத்தெரிவித்துள்ளார்.

  • 11 Jun 2022 6:00 AM IST


    டான்பாசில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் ரஷியா அழிக்க விரும்புகிறது - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

    ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது இரவு உரையில், வோல்னோவாகா மற்றும் மரியுபோலில் செய்ததைப் போல, டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் ரஷியா அழிக்க விரும்புகிறது என்று கூறினார்.

    மேலும், ஒரு காலத்தில் மகிழ்ச்சியாக இருந்த நகரங்களின் இந்த இடிபாடுகள், நெருப்பின் கருப்பு தடயங்கள், வெடிப்பிலிருந்து வரும் பள்ளங்கள் - இவை அனைத்தையும் ரஷியா தனது அண்டை நாடுகளுக்கும், ஐரோப்பாவிற்கும், உலகிற்கும் கொடுக்க முயலும்” என்று அவர் கூறினார்.

  • 11 Jun 2022 5:29 AM IST


    உக்ரைனுக்கு கனடா 1 பில்லியன் கனடா டாலர் (சுமார் ரூ.6,150 கோடி) கடன் வழங்கி உள்ளது. இது அந்த நாட்டின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒன்று என்று அதன் நிதி அமைச்சகம் தெரிவித்துளளது.

    இதற்கிடையே இங்கிலாந்து ராணுவ மந்திரி பென் வாலஸ் நேற்று திடீரென அறிவிக்கப்படாத பயணமாக உக்ரைன் சென்றார். அவர் கீவ் நகரில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். உக்ரைன் போரில் அதிபரின் பணியை வெகுவாக பாராட்டினார்.

  • 11 Jun 2022 4:20 AM IST


    ரஷிய அதிபர் புதினுக்கும், 200-க்கும் மேற்பட்ட ரஷிய அதிகாரிகளுக்கும் உக்ரைன் பொருளாதார தடை விதித்துள்ளது.

    இதற்கான இரு வெவ்வேறு உத்தரவுகளில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார். இதனால் உக்ரைன் வழியாக எந்தவொரு வர்த்தகத்திலும் அவர்கள் ஈடுபடமுடியாது. சொத்துகளும் முடக்கப்படும்.

  • 11 Jun 2022 3:25 AM IST


    உக்ரைன் போரில் ரஷியாவிடம் இங்கிலாந்து நாட்டின் ஐடன் அஸ்லின் (வயது 28), ஷான் பின்னர் (48) மற்றும் மொராக்கோவின் சவுதின் பிராகிம் ஆகிய 3 பேரும் பிடிபட்டுள்ளனர். அவர்கள் கூலிப்படையினர் என கூறி, பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டொனெட்ஸ்க் கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த உத்தரவு வெட்கக்கேடானது என்று இங்கிலாந்து வெளியுறவு மந்திரி லஸ் டிரஸ் சாடி உள்ளார். இது ஜெனீவா உடன்பாடுகளை மீறிய செயல் என்று பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தி தொடர்பாளர் ஜேமி டேவிஸ் கூறி உள்ளார்.

  • 11 Jun 2022 2:35 AM IST


    உக்ரைன் போரால், ரஷியாவின் கட்டுப்பாட்டில் போய் விட்ட துறைமுக நகரமான மரியுபோலில் தற்போது ஏறத்தாழ 1 லட்சம் பேர் உள்ளனர். அங்குள்ள பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கூட கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அங்கு காலரா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், “ரஷியா தான் ஆக்கிரமித்துள்ள மரியுபோலில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர போராடுகிறது. பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. தொலைபேசி மற்றும் இணைய சேவைகளில் பெரும் இடையூறு தொடர்கிறது. உக்ரைனில் 1995-ம் ஆண்டில் காலரா பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது மே மாதம் முதல் காலரா பாதிப்பு பதிவாகி வருகிறது. காலரா பெருமளவில் வெடிக்கிற ஆபத்து உள்ளது.” என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்