< Back
உலக செய்திகள்
கட்டி அணைத்ததால் உடைந்த விலா எலும்பு,  நண்பர் மீது இளம்பெண் புகார்
உலக செய்திகள்

கட்டி அணைத்ததால் உடைந்த விலா எலும்பு, நண்பர் மீது இளம்பெண் புகார்

தினத்தந்தி
|
18 Aug 2022 8:51 PM IST

நண்பர் விளையாட்டாக கட்டி இறுக்க அணைத்ததில் இளம்பெண்ணின் விலா எலும்புகள் உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீஜிங்,

சீனாவின் உகான் மாகாணத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த மே மாதம் தனது அலுவலக நண்பர்களுடன் டீ அருந்திக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை திடீரென கட்டி அணைத்திருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், மாலை பணிமுடிந்து வீடு திரும்பியிருக்கிறார்.

இரவு வலி அதிகமாக இருக்கவே, சூடு நீரில் ஒத்தடம் வைத்துக்கொண்டு படுத்திருக்கிறார். மறுநாளும் வலி குறையாததால் அலுவலகத்தில் விடுமுறை எடுத்து விட்டு வீட்டிலேயே இருந்துவிட்டார்.

பின்னர் நேரம் செல்ல செல்ல வலி அதிகமாக இருந்ததால் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். அதில் இளம்பெண்ணின் மூன்று விலா எலும்புகள் உடைந்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து, அந்த இளம்பெண் சில மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் மருத்துவச் செலவில் சிகிச்சை பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில், மருத்துவ சிகிச்சை முடிந்து வேலைக்கு திரும்பிய அந்த இளம்பெண், இறுக அணைத்து தன் விலா எலும்புகளை உடைத்த அந்த நபரிடம் தன்னுடைய மருத்துவ செலவுகளுக்கான பில்களை காட்டி பணம் கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த நபர், ``நான் கட்டிப் பிடித்ததால் தான் உனக்கு இப்படி ஆனது என்பதற்கான ஆதாரம் என்ன உள்ளது?" எனக்கூறி சிகிச்சை செலவை ஏற்க மறுத்து விட்டார். அதையடுத்து இளம்பெண் கோர்ட்டை நாடியிருக்கிறார். அவர் மனுவை விசாரித்த நீதிபதிகள், ``இடைப்பட்ட காலத்தில் அந்தப் பெண் வேறு எங்கும் எலும்பு உடைத்துக்கொள்ளவில்லை. எனவே, இளம்பெண்ணை இறுக அணைத்து அவர் எலும்புகள் உடைவதற்கு காரணமாக இருந்த இளைஞர் 10,000 யுவான் அந்தப் பெண்ணுக்கு வழங்கவேண்டும்" என உத்தரவிட்டனர். கட்டி அனைத்தது விபரீதத்தில் முடிந்து விட்டது என இழப்பீட்டை அவர் செலுத்தி உள்ளாதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்