சீன பாணியிலான ஜனநாயகம் சீனாவில் உள்ளது: பைடனுக்கு ஜின்பிங் பதில்
|அமெரிக்கா பாணியிலான ஜனநாயகம் அமெரிக்காவிலும், சீனாவில், சீன பாணியிலான ஜனநாயகமும் உள்ளது என சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார்.
பாலி,
சீனாவில் அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு பிஜீங்கில் கடந்த அக்டோபர் 16-ந்தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெற்றது. இதில் ஜின்பிங் மீண்டும் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஜின்பிங் 3-வது முறையாக சீனாவின் அதிபராக தேர்வானார்.
எனினும், சீனாவில் ஒரு கட்சி ஆட்சி நடைமுறை இருந்து வருகிறது என பல மனித உரிமை அமைப்புகள், மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கூறி வருவதுடன் சீனாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.
ஏனெனில், சுதந்திர நீதி நடைமுறை, பத்திரிகை சுதந்திரம் அல்லது தேசிய பதவிகளுக்கு சர்வதேச வாக்குரிமை ஆகியவை இல்லாத சூழல் உள்ளது. ஜின்பிங் மற்றும் அவரது கட்சி பற்றிய விமர்சனங்கள் இணையதளத்தில் தணிக்கை செய்யப்பட்டு விடுகின்றன. அது சீனாவிற்குள்ளேயே தடுக்கப்பட்டு, முடங்கி விடுகிறது.
இந்த சூழலில், அமெரிக்க அதிபர் பைடன் சமீபத்தில் கூறும்போது, ஜனநாயக நடைமுறையிலான அரசு மற்றும் சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றில் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்க கூடிய நிலை காணப்படுகிறது. நடப்பு சர்வதேச அரசியல் சூழலானது ஏற்ற, இறக்கங்களுடன் காணப்படுகிறது என அவர் கூறினார்.
உலகின் 2-வது பெரிய பொருளாதாரம் கொண்ட சீனாவில் வாழ்நாள் முழுவதும் ஆட்சியாளராக நீடிக்க அதிபர் ஜின்பிங் திட்டமிட்டு இருப்பது போன்ற விசயங்கள் உலக அளவில் கவனத்தில் கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை முன்னிட்டே பைடன், ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றை பற்றிய பேச்சுக்கள் இன்றைய உலகை வரையறை செய்யும் அம்சங்களாக இருப்பதில்லை என கூறியுள்ளார்.
இந்நிலையில், பாலியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் உலகின் இரு பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவின் அதிபர்கள் சந்தித்து கொள்ள இருக்கின்றனர். இந்த சூழலில் பைடன் பேசியது பற்றி குறிப்பிட்டு, ஜின்பிங் கூறும்போது, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவை இலக்கை அடைய கூடிய மனிதகுலத்தின் பொதுவான முயற்சிகளாக உள்ளன.
சீன கம்யூனிஸ்டு கட்சியும் அதனை நிலையாக செயல்படுத்த முயற்சிக்கிறது. அமெரிக்காவில், அமெரிக்கா பாணியிலான ஜனநாயகம் உள்ளது. சீனாவில், சீன பாணியிலான ஜனநாயகம் உள்ளது என பதிலாக அவர் கூறியுள்ளார்.