இந்தியா எதிர்ப்பு எதிரொலி: சீன உளவு கப்பல் இலங்கைக்கு வரவில்லை என தகவல்
|சீன உளவு கப்பல் அம்பந்தொட்டையில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் இலங்கை அனுமதிக்காக காத்திருக்கிறது.
கொழும்பு,
சீன உளவு கப்பல் 'யுவான் வாங்-5' கடந்த 11-ந் தேதி இலங்கையின் அம்பந்தொட்டை துறைமுகத்துக்கு வருவதாக இருந்தது. 17-ந் தேதி வரை அங்கேயே நங்கூரமிட்டு நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது. எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காக அக்கப்பல் வருவதாக கூறப்பட்டது.
இருப்பினும், அது உளவு பார்க்க வாய்ப்புள்ளதால் அதன் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையடுத்து, கப்பலின் வருகையை தள்ளிப்போடுமாறு சீனாவிடம் இலங்கை கூறியது. ஆனால் அதற்குள் சீன உளவு கப்பல், இந்திய பெருங்கடலில் நுழைந்து விட்டது.
இந்தநிலையில், எதிர்பார்த்தபடி, சீன உளவு கப்பல் அம்பந்தொட்டை துறைமுகத்துக்கு வரவில்லை. இதை இலங்கை துறைமுக ஆணையம் நேற்று உறுதி செய்தது. அம்பந்தொட்டையில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் அனுமதியை எதிர்பார்த்து அக்கப்பல் காத்திருப்பதாக தெரிவித்தது.