தடையை மீறி இலங்கை துறைமுகத்துக்கு வரும் சீன உளவு கப்பல்
|சீன உளவு கப்பல் இன்று தடையை மீறி இலங்கை துறைமுகத்துக்கு வந்து சேரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பீஜிங்,
சீனா, தனது 'யுவான் வாங் 5' என்ற ஆராய்சி கப்பலை இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகத்தில், 6 நாட்கள் நிறுத்தி செயற்கைக்கோள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தது. இதற்கு இலங்கை அரசும் ஒப்புதல் அளித்தது.
இதற்கிடையில் சீனா ஆராய்ச்சி கப்பல் என்று கூறுவது உண்மையில் ஒரு உளவு கப்பல் என்றும் அது இலங்கையில் நிறுத்தப்படுவது இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் இலங்கை அரசிடம் இந்தியா நேரடியாக கவலையை வெளிப்படுத்தியது.
அதை தொடர்ந்து, 'யுவான் வாங்-5' கப்பலின் பயணத்தை ரத்து செய்யும்படி சீனாவிடம் இலங்கை அரசு தெரிவித்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய இலங்கையை சீனா வலியுறுத்தியது. ஆனால் இலங்கை அதை ஏற்கவில்லை.
இந்தநிலையில் தடையை மீறி சீனாவின் 'யுவான் வாங் 5' கப்பல் இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகத்தை நோக்கி புறப்பட்டது.
இந்திய நேரப்படி இன்று (வியாழக்கிழமை) காலை 9:30 மணிக்கு, அந்த கப்பல் ஹம்பன்தொட்டா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இது தொடர்பாக சீனா தரப்பிலோ அல்லது இலங்கை தரப்பிலோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.