அமெரிக்க அணு ஆயுத ஏவுதளத்தின் வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் - பரபரப்பு சம்பவம்
|சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் மவுண்டானா மாகாணம் கஸ்ஹடி நகரில் அந்நாட்டு விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்தில் அணு ஆயுத ஏவுதளம் உள்ளது. அமெரிக்காவில் மொத்தமுள்ள 3 அணு ஆயுத ஏவுதளங்களில் இந்த தளமும் ஒன்று. இந்த விமானப்படை தளம் பல அடுக்கு பாதுகாப்பு கொண்டதாகும்.
இந்நிலையில், இந்த அணு ஆயுத ஏவுதளத்தின் வாபரப்பில் பல அடி உயரத்தில் கடந்த புதன்கிழமை வெள்ளை நிறத்திலான மிகப்பெரிய மர்ம பலூன் பறந்தது. இந்த பலூன் சீன உளவு பலூன் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அணு ஆயுத ஏவுதளத்தின் ரகசிய தகவல்களை சீன ரகசிய உளவு பலூன் சேகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக ரீதியிலான விமானங்கள் பறக்கும் உயரத்திற்கு அதிகமான உயரத்தில் அந்த உளவு பலூன் பறப்பதாகவும், தற்போது வரை அந்த பலூன் நிலத்தில் உள்ள மக்களுக்கு ராணுவ ரீதியாகவோ பிற ரீதியாகவோ எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி தெரித்துள்ளார்.
சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ரகசிய தகவல்களை சேகரிப்பதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பலூனை தரையிறக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.